மதுரை தென்பழஞ்சியை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி சிவராமன். இவர் நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரில் மிளகாய் விளைவிக்கிறார்.
ஊடுபயிராக அகத்தி கீரையை பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். மழையின்றி வறண்ட பூமியில் நெல் பயிரிட இயலாது. நெல்லிற்கு அதிகளவு தண்ணீர் தேவை என்பதால் மாற்றுப்பயிர் குறித்து சிவராமன் யோசித்தார். விளைவு நீர் மேலாண்மை தொழில்நுட்பம் இவருக்கு கை கொடுத்தது.
அவர் கூறியதாவது: ஒரு கிலோ நெல் சாகுபடி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே குறைந்தளவு நீரில் அதிக மகசூல் பெற ஒரே வழி நீர் மேலாண்மை தொழில்நுட்பம் மட்டுமே. பொதுவாக மழை பெய்தால் மட்டுமே கண்மாய்கள் நிரம்பும். சென்ற ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், இந்த ஆண்டும் போதிய மழை இல்லாததாலும் கண்மாய் பாசனத்தை நம்பிய விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய வழியில்லை. எனது வயலில் உள்ள கிணற்றில் சிறிதளவு தண்ணீர் உள்ளது. அதை நம்பி 60 சென்டில் மிளகாய் பயிரிட்டேன்.
ஊடுபயிராக அகத்தி கீரையை நடவு செய்தேன். அகத்தி மூலம் மாதம் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அகத்தி பயிரிட்டுள் ளதால், வெயில் தாக்கத்திலிருந்த மிளகாயை பாதுகாக்கிறது. தரையும் ஈரமாக இருந்து கொண்டே இருக்கும்.
வாரம் இருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மிளகாய் ஆறு மாதங்கள் காய்க்கும். மிளகாய்க்கு நல்ல விலை உள்ளது. அனைத்து செலவுகளும் போக 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தவிர அகத்தியிலும் நல்ல வருமானம் உள்ளது. சொட்டுநீர் பாசன முறையில் மிளகாய், அகத்தியை அடுத்து சிறு தானியங்களை பயிரிட உள்ளேன் என்றார்.