கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள்.
இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும்.
ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த வேண்டும்.
மறுநாள், 5 கிலோ விதிநெல்லை மூன்றாம் கொம்பு விதையாக விதைக்க வேண்டும்.
காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும். விதைத்த 10-ம் நாள் 10 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும்.
பதின்மூன்றாம் நாள் 100 மில்லி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பதினெட்டாம் நாளில் முக்கால் அடி உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.
சாகுபடி வயலில் 2 சால் சேற்றுழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, வரிசைக்கு வரிசை 40 சென்டிமீட்டர் இடைவெளியும், பயிருக்கு பயிர் 25 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்குமாறு குத்துக்கு 2 நாற்றுகள் என நடவு செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால் அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். நடவு செய்த 3, 15, 30 மற்றும் 45-ம் நாட்களில், 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவிவிட வேண்டும்.
நடவு செய்த 5,17,32 மற்றும் 47-ம் நாட்களில், ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும்.
இலைக்கருகல் நோயைத் தடுக்க, 60-ம் நாளன்று 10 கிலோ சாணம் கலந்த கரைசலில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்க வேண்டும்.
தண்டு உருளும் பருவத்தில் 5 லிட்டர் தேமோர் கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நடவிலிருந்து 92-ம் நாளுக்கு மேல் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
கருங்குறுவை ரகம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். குறுவை, சம்பா இரண்டு பட்டங்களுக்கும் ஏற்றது.