பெல்லாரி வெங்காயத்தை எந்த மாதங்களில் பயிரிட்டால் அதிக மகசூல் பெறலாம்…

 |  First Published Feb 18, 2017, 12:41 PM IST



உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை பெற்றுத் தருவதால் பெரிய வெங்காயம் என்று அழைக்கப்படும் பெல்லாரி வெங்காயம் ஒரு முக்கியமான காய்கறி பயிராக உள்ளது.

நமது நாட்டில் தற்போதைய உற்பத்தி ஹெக்டேருக்கு 10 முதல் 12 டன்கள் மட்டுமே. வெங்காயத்தில் அதிக உற்பத்திக்கு நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் சிறந்த மேலாண்மை முறைகளுடன் அதிக மகசூல் தரவல்ல ரகங்களை தக்க பருவங்களில் சாகுபடி செய்வதே தீர்வாக உள்ளது.

Latest Videos

undefined

பருவம்:

தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் மே, ஜூன் (கரீப் பருவம்) மாதங்களிலும் மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் (ரபி பருவம்) மாதங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்தால் அதிக மகசூலைப் பெறலாம்.

எனினும் குளிர் கால வெங்காய பயிர்களில்தான் சிறந்த மகசூல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரகங்கள்:

தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் பல்வேறு ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்கள் வெளியிட்டிருப்பினும் அடர் சிகப்பு ரகங்களில் என் – 53, அக்ரிபவுன்ட், வெளிர் சிகப்பு ரகங்களில் பூசா சிகப்பு, என்-2-4-1, அக்ரிபவுன்ட் ஆகியவை முக்கிய ரகங்களாக சாகுபடியில் உள்ளன.

பயிரிடும் முறை:

பொதுவாக பெல்லாரி வெங்காயம் 125 முதல் 140 நாள்கள் வயதுடையதாகும். இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள சமமான, வளம் நிறைந்த மண் தேவைப்படுகிறது.

மண்ணின் கார அமிலத் தன்மை 7 முதல் 7.6 வரை இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் களிமண் நிலங்களை வெங்காய சாகுபடிக்கு தவிர்ப்பது நல்லது.

விதை ஹெக்டேருக்கு 5 முதல் 6 கிலோ. நாற்றங்கால் ஒரு ஹெக்டேருக்கு தேவைப்படும் நாற்றுகளை உற்பத்தி செய்ய 7.5 மீ. நீளம், 1 மீ. அகலம், 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப்பாத்தி தேவைப்படும்.

உரங்கள் முறையாக பயன்படுத்தினால் 6 முதல் 8 வாரங்களில் நடவுக்கு தயாராகிவிடும். நடவுக்குப் பின் 4 முதல் 6 நாள்களுக்கு ஒரு முறை மண்ணின் ஈரத்திற்கு ஏற்றவாறு நீர் பாய்ச்ச வேண்டும்.

 வெங்காய பயிரினை இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் மற்றும் பியூசேரியம் தண்டு அழுகல் மற்றும் வெங்காய அழுகல் போன்ற நோய்கள் பெருமளவில் தாக்கி சேதம் ஏற்படுத்துகிறது.

இவற்றிற்கு தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் ஆலோசனையின்படி மருந்து தெளித்து பாதுகாக்கலாம்.

கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் பிடாகம், மரகதபுரம், சுந்தரிபாளையம், நல்லரசன்பேட்டை ஆகிய கிராமங்களில் பெல்லாரி வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர்.

விவசாயிகள் நாற்றுவிட்டது மற்றும் நடவு செய்த காலம் முதல் வெங்காய பயிரினை கவனமாக கவனித்து வரவேண்டும். அதில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தோட்டக் கலை அலுவலர்களை அனுகி விவரம் பெற்று பயன்பெறலாம்.

click me!