ஆடாதோடா – உயிர்வேலியாய் அமைத்தால் அதிக பயன்கள் உண்டு…

 |  First Published Mar 21, 2017, 11:52 AM IST
Atatota uyirveliyay set has more benefits



ஆடு தொடாத இலை அதனால் இது ஆடாதோடா இலை.

ஆடாதோடா மூலிகையானது அகாந்தேசி என்ற தாவரவியல் குடும்பத்தில் ஜஸ்டிசியா ஆடாதோடா என்ற தாவரவியல் பெயரால் வழங்கப்படுகிறது. 4 மீட்டர் வரை வளரக்கூடியது.

Latest Videos

undefined

ஆடாதோடா முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டாலும் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இதன்பங்கு அளப்பரியதாகும். குறிப்பாக சுவாச நோய்கள், சளி, இருமல், ஆஸ்துமா, தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுகிறது. இத்தாவரத்தில் காணப்படும் வாசிசின் என்ற மருந்துப் பொருளே இதன் மருத்துவ குணத்துக்கு காரணமாக விளங்குகிறது. இலைப்பகுதியிலே அதிகம் காணப்படுகிறது.

 தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திலும் காணப்படுகிறது. வீடுகளில் அழகு செடியாகவும் வளர்க்கலாம். இலைகள் கசப்புத்தன்மை கொண்டவை. இதனை வெல்லத்துடன் கலந்து கசாயமாக்கி அருந்துவதால் மூச்சுத்திணறல் குணமாகும். வீட்டுத்தோட்டம் மற்றும் வயல்களில் உயிர்வேலியாக நடலாம்.

உயிர் வேலியாய் அமைப்பதன் பயன்கள்:

1. இதனுடைய இலை, தண்டு, வேர் முதலியன மருத்துவ குணம் கொண்டது. கால்நடைகள் இதனை உண்ணாது.

2. இது நீண்ட இலைகளையும் நன்கு அடர்த்தியாகவும், எப்போதும் பசுமையாகவும் வளர்ந்து சிறந்த வேலியாக பயன்படுகிறது.

3. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

4. எல்லா வகை காலநிலை மற்றும் மண்ணில் வளரக்கூடியது.

5. இதனுடைய காய்ந்த இலை மூலிகை கம்பெனிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் சந்தைப்படுத்துதல் எளிது.

6. இத்தாவர இனப்பெருக்கம் தண்டினை வெட்டி நடுவதன் மூலம் எளிய முறையிலே வளர்க்கலாம்.

சாகுபடி:

ஆடாதோடாவின் முதிர்ந்த தண்டானது 15-20 செ.மீ. அளவுக்கு நறுக்கப்பட வேண்டும். அதில் 3-4 கணுக்கள் இருக்க வேண்டும். வெட்டப்பட்ட தண்டானது குப்பை மற்றும் மண் கலந்த பாலிதீன் பைகளில் நடவேண்டும்.

2 மாதங்களுக்கு பின் பாலிதீன் பைகளில் இருந்து பிரிக்கப்பட்டு தரையில் நடலாம். தொழு உரம் அவசியம். ஆரம்ப காலங்களில் நீர் பாய்ச்சுவதும், களை நீக்குவதும் அவசியமாகும். மழைக்காலத்தில் இலைப்புள்ளி நோய் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்நேரத்தில் பாதிக்கப்பட்ட இலைகளை நீக்குவதன் மூலமாகவோ அல்லது 1% போரடியாக்ஸ் கலவையை தெளிப்பதன் மூலமாகவோ நீக்கலாம். 

அறுவடை:

நட்ட 6 மாதத்தில் இலைகளை அறுவடை செய்யலாம். வேரானது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பே அறுவடை செய்யப்பட வேண்டும். இலைகளை கைகளைக் கொண்டு ஒவ்வொன்றாகப் பறிக்க வேண்டும். உருவக் கூடாது. ஆகஸ்ட் - அக்டோபர் மாதங்களில் இலைகளில் அதிக மருந்துச்சத்து கண்டறியப்பட்டுள்ளதால் அறுவடைக்கு அதுவே சிறந்த காலமாகும்.

அறுவடை செய்யப்பட்ட இலைகளை 2-3 நாட்களுக்கு நிழலில் நன்கு காயவைக்க வேண்டும். காய்ந்த இலைகளில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் இருக்க வேண்டும். காய்ந்த இலைக்காம்புகள் அனுமதிக்கப்படுகிறது. முற்றிய தண்டுப்பகுதிகள் நீக்கப்பட வேண்டும்.

 இன்று எல்லா மூலிகைக ம்பெனிகளுக்கும் ஆடாதோடா தேவை என்பதால் இதனை பயிரிடுவது வருமானம் தருவதாக அமையும்.

மேலும் நிலைத்த அறுவடை பின்பற்றப்பட வேண்டும். ஆடாதோடா இனமானது அழியும் தருவாயில் உள்ளதால் முடிந்தளவு வேரோடு அறுவடை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

click me!