சுத்தமான தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் முதல் பெட்டிக்கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு.
மலை, மரம், பாறை, கட்டிடம் என எட்டாத உயரத்தில் அடைகட்டும் தேனீக்களை, வீட்டிலேயே வளர்த்து தேன் சேகரித்து விற்கலாம். அதன்மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்.
மலை, கொம்பு, கொசு, இத்தாலி என பல வகைகள் இருந்தாலும், இந்திய தேனீ வகைதான் இந்த தொழிலுக்கு ஏற்றதாக, அதாவது பெட்டிகளில் வளர்க்க தகுந்தவையாக உள்ளன.
தேனீ வளர்க்க விரும்புபவர்கள் முதலில் இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து பயிற்சி பெற வேண்டும்.
தேன் மட்டுமல்ல, தேன் அடையும் விலை போகும். ஈடுபாடு, கவனம் இருந்தால் தேன் கூட்டை நன்றாக பராமரிக்க முடியும். எறும்பு, கரப்பான், பல்லி, குளவி, உண்ணி பேன், மெழுகு பூச்சி போன்றவை தேனீக்களுக்கு சேதத்தை விளைவிக்கும்.
மெழுகுப்பூச்சிகள் தேன் பெட்டியின் அடித்தளத்தில் குவியல், குவியலாக முட்டையிடும். அதிலிருந்து வெளிவரும் புழுக்கள் தேன் பெட்டியின் உள்ளே சென்று தேன் அடையைத் தின்று தீர்த்துவிடுகின்றன. இதன் தாக்குதல் அதிகமானால் தேனீக்கள் வெளியேறிவிடும்.
தாய்சாக் புரூட் எனப்படும் வைரஸ் நோய் தேனீக்களை தாக்குகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட புழுக்கள் பார்ப்பதற்கு சற்று விறைப்பாகவும், தலை கருத்தும் இருக்கும். இவ்வாறு ஏற்பட்டால் தீ வைத்து அழித்து விட வேண்டும்.
பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க பெட்டியின் கீழ் கழிவு எண்ணெய், ஆயில் போன்றவற்றைத் தடவினால் தேனீக்களுக்கு பூச்சி தொந்தரவு இருக்காது.
முதலீடு...
3 ஆயிரம் தேனீக்களுடன் கூடிய 50 பெட்டிகள் தலா ரூ. 1500 வீதம் ரூ. 75 ஆயிரம். பெட்டி வைக்கும் 50 ஸ்டாண்ட்கள் ரூ. 5 ஆயிரம், 2 புகை செலுத்தும் கருவிகள் ரூ. 600, முகக்கவசம் 2 தலா ரூ. 200, தேன் பிழிந்தெடுக்கப் பயன்படும் இயந்திரம் ரூ. 2 ஆயிரம், கையுறை 2 ரூ. 200 என மொத்த செலவு ரூ. 83 ஆயிரம்.
தேன் கூட்டை இடமாற்றம் செய்யவோ, தேன் எடுக்கவோ 2 பேர் இருந்தால் போதும். இடமாற்றம் செய்தால் வாகனச் செலவும், வாடகை இடமாக இருந்தால் அதற்கான செலவும் கூடுதலாக ஆகும்.
சந்தை வாய்ப்பு...
பெரிய நிறுவனங்களுக்கு விற்கலாம். நேரடியாக பாட்டிலில் அடைத்து டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் மருந்துக்கடைகளுக்கு சப்ளை செய்யலாம். தேவை அதிகமாக இருப்பதால், எப்போதும் தேனுக்கு கிராக்கி உண்டு.