கரும்பை தாக்கும் பூச்சி வகைகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் விளையும் முக்கிய பணப்பயிர்களில் கரும்பு முக்கிய பங்கு வகிப்பதுடன், இந்திய பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகளவில், 60 சதவீதம் அளவுக்கு சர்க்கரை கரும்பில் இருந்து தான் பெறப்படுகிறது. கரும்பு உற்பத்தி மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை குறைக்கும் காரணிகளில் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், 20 சதவீத மகசூல் மற்றும், 15 சதவீதம் சர்க்கரை கட்டுமானம் குறைகிறது.
200க்கும் மேற்பட்ட பூச்சிகள் கரும்பை தாக்குகின்றன. அவற்றில், இளங்குருத்துப்புழு, இடைக்கணுப்புழு ஆகியவை, முக்கியமானதாகும்.
நுனிக்குருத்துப்புழு, வேர்புழு, கரையான் ஆகியவை, சில மாவட்டங்களில் மட்டும் அதிக சேதம் விளைவிக்கின்றன.
சாறு உறிஞ்சும் பூச்சிகளான செதில் பூச்சி, வெள்ளை ஈ, பைரில்லா, மாவுப்பூச்சிகள் ஆகியை தாக்குகின்றன. வெட்டுக்கிலி மற்றும் எலிகள் பிரச்சனையும் ஆங்காங்கே உள்ளது.
கரும்பு இளங்குருத்துப்புழு:
கரும்பை தாக்கும் மூன்று வகை துளைப்பான்களில் இது முக்கியமானதாகும். இளம் பயிரில் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை இப்புழுவின் சேதம் பெருவாரியாக காணப்படும். மழைக்கால பருவத்திலும், மழைக்கு முந்தைய பருவத்திலும், மிகையாக காணப்படும்.
இளம்புழுவானது தோகையின் அடியில் சென்று மேலிருக்கும் இலை பச்சையத்தை தின்று பின் பூமி மட்டத்துக்கு சிறிது மேலாக தண்டில் துளையிட்டு செல்லும். புழுவானது ஒரு புழுவே காணப்படும். புழுவானது ஒரு தண்டினின்று வெளிவந்து அருகேயுள்ள தண்டுகளை துளைத்து தாக்க கூடும்.
இளங்குறுத்துப்புழு நிர்வாகம்:
கரும்பு நட்ட முதல் வாரத்துக்குள் பயிர்களின் மேல், 10 முதல், 15 செ.மீ., உயரத்துக்கு காய்ந்த கரும்பு தோகை பரப்புவதால், மண்ணின் ஈரம் பாதுகாக்கப்பட்டு, குருத்துப்புழுவின் தாக்குதல் குறைகிறது. கரும்பு முளையிட்ட ஒரு மாதத்திலும், பின்பு ஒரு மாதம் கழித்து மறுமுறையும் மண் அணைக்க வேண்டும்.
கரும்பு நட்ட, 30வது நாளில் இருந்து, 15 நாள், இடை வெளியில் மூன்று முறை ஏக்கருக்கு, ஒரு சி.சி., என்ற அளவில் முட்டை ஒட்டுண்ணியான, ‘டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்’ விடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
நுனிக்குருத்துப்புழு:
கரும்பு பயிர் செய்யப்படும் எல்லா இடங்களிலும் இது காணப்படுகிறது. சிறிய துளையிட்டு இப்புழுவினால் தாக்கப்பட்ட பயிரை எளிதில் கண்டு கொள்ளலாம். ஆறு முதல், 11 நாட்களில், முட்டையில் இருந்து இளம் புழுக்கள் வெளிப்பட்டு, தோகை நரம் பினை துளைத்து உட்சென்று குருத்தினை தாக்கும்.
பூச்சி நிர்வாகம்:
தோகை உரித்தல் மற்றும் முட்டை தொகுதிகளை சேகரித்து, அழித்தல் மூலம் இப்பூச்சியை கட்டுப்படுத்தலாம். புழு தாக்கிய தண்டு பகுதியை வெட்டி எடுத்து விடுவது நல்லது.
இலைதத்துப்பூச்சி:
கரும்பு பயிர்களில் இது அதிகம் காணப்படும். முழுவதும் வளர்ச்சியடைந்த தத்துப்பூச்சி மஞ்சள் நிறத்தில், நீண்ட கூரிய மூக்குடன் இருக்கும். குஞ்சு பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும், இலைகளின் அடிப்பகுதியில், இருந்து சாற்றை உறிஞ்சி சேதம் தரும்.
பூச்சி நிர்வாகம்:
தேவைக்கு அதிகளவு தழைச்சத்து உரத்தை பயன்படுத்த கூடாது. ஹெக்டேருக்கு மாலத்தியான் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
கரையான் பூச்சி:
கரையான் கூட்டம் கூட்டமாக வாழும் பூச்சியினமாகும். சில இடங்களில் முக்கியமாக மணற்பாங்கான பூமியில், கரும்பு பயிர்கள் கரையானால் மிகவும் பாதிப்படைகிறது. இவை கரும்பு கரணையை தாக்கி தின்பதால், சுமார் 40 முதல் 60 சதவீதம் முளை கரனைகள் நாசமடையும்.
பூச்சி நிர்வாகம்:
குளோர்பைரிபாஸ் அல்லது லிண்டன் தூள் போன்ற மருந்துகளை கரணைகளை நடுவதற்கு முன் பார்களில் இட்டு நடுவதன் மூலம் தடுக்கலாம்.
வேர்ப்புழு:
வெண்ணிற புழுக்கள் பூமியினுள் வேர்களை கடித்து தின்னும். சில சமயங்களில் கரும்பின் சதை பகுதியை தின்று துளைத்து உட்செல்லும். தொடர்ந்து இப்புழுவின் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் திம்மெட் குருணையை, ஹெக்டேருக்கு 40 கிலோ வீதம் பூமியிலிட்டு கிளிறி விடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.