இயற்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு அதிக லாபம் தரும் புல்வகை பயிர்கள் பன்னெடுங்காலமாக தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தீவனப்புல் சாகுபடி செய்தால் சுற்று வட்டார கிராம மக்களின் கால்நடைகளுக்கு புல் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதன் மூலம் தினமும் வருமானம் கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?
தீவனப்புல் எப்படி சாகுபடி செய்வது?
நிலத்தை முதலில் நன்றாக உழவு செய்த பின்னர் 10 டன் நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் டிஏபி உரம் 2 மூட்டை ஆகியவற்றை நேரடியாக போட்டு, ஒரு ஏக்கர் நிலத்துக்கு விதை கட்டிங் வாங்கி ஒரு அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
பின்னர் 2 அல்லது 3 நாள்களுக்கு ஒரு முறை காயவிட்டு, வெப்பத்தின் அளவுக்கேற்ப நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.
பின்னர் ஒரு மாதம் கழித்து தீவனப்புல் நன்றாக வளர்ந்து வரும் போது ஏக்கருக்கு 50 கிலோ அளவில் யூரியாவை இரண்டாகப் பிரித்து தீவனப்புல் வெட்டுவதற்கு முன்பாக ஒரு முறையும், வெட்டியதற்கு பின்பு ஒருமுறை உரமிடும் முறையை பின்பற்றி வரலாம்.
பூச்சித் தாக்குதல் காணப்பட்டால், குறிப்பாக புகையான் தாக்குதலினால் ஏற்படும் உற்பத்தி இழப்புகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் அளவில் எண்ணெய் கரைசலை மண்ணுடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம். இதன் வாயிலாக வேர்ப்பூச்சி தாக்குதலையும் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 கட்டுகள் வரை தீவனப்புல் மகசூல் கிடைக்கிறது.
தினந்தோறும் புல் கட்டுகளை விற்பனை செய்தால் ஒரு கட்டு ரூ.10 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து லாபம் பெறலாம். இந்த தீவனப்புல் சாகுபடி 2 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வருமானத்தைத் தரும்.
பனிப்பொழிவு உள்ள காலங்களில் புகையான் தாக்குதல் அதிகம் காணப்படும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தீவனப்புல்லை அழித்து விட்டு, இரண்டு மாத காலத்துக்கு பின் மீண்டும் தீவனப்புல் மறுதாம்புப் பயிராக மீண்டும் துளிர விட்டு சாகுபடி மற்றும் அறுவடை பணிகளை தொடங்கலாம்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறைந்த செலவில் தீவனப்புல் சாகுபடி செய்து தினந்தோறும் அதிக லாபம் பெறலாம்.