வசம்பு, இஞ்சி தாவரவியல் குடும்பத்தைச் சார்ந்தது. இவைகள் 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரக்கூடிய பயிர்வகையாகும். வசம்பு வேர்கள் சரியாக 50 முதல் 60 கிராம் எடையுள்ளவை. வேர்கள் மஞ்சள் கிழங்கினைப் போன்று நெருக்கமான கணுக்களை உடையது. வேர்கள் ஒரு மீட்டர் வரை அகலமாகப் படரும். பக்க வேர்கள் வேகமாக வளரும் தன்மை உடையவை.
களிமண் மற்றும் நீர்பிடிப்புள்ள மண் வகைகள் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றவை. ஆற்றுப் படுகையில் நீரோட்டம் உள்ள ஓரங்களில் இதனை சாகுபடி செய்யலாம். நெற்பயிர் சாகுபடிக்கு உகந்த நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் சாகுபடி செய்யலாம். வெப்பமான தட்பவெப்ப நிலையில் நன்றாக வளரும். ஆனால் ஆண்டு முழுவதும் சீரான மழையளவு இருப்பது அவசியம். செடிகளின் துரித வளர்ச்சிக்கு அதிக அளவு சூரிய ஒளி இருப்பது நல்லது. வசம்பு மருந்துப் பயிரைச் சமவெளியிலும் மலைப் பிரதேசங்களிலும் சாகுபடி செய்யலாம்.
வசம்பு வேர் அல்லது கிழங்குகளை விதைப்பதற்கு பயன்படுத்தலாம். எக்டருக்கு 1500 கிலோ கிழங்கு தேவைப்படும். நீர்க்கசிவு உள்ள இடங்களைத் தேர்வு செய்து ஒரு எக்டருக்கு 25 டன் தொழு உரமிட்டு மண்ணில் தண்ணீர் தேங்கும் வண்ணம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். சேற்று உழவு செய்து பண்படுத்த வேண்டும். விதைக்கிழங்குகளை 30 செ.மீ. இடைவெளியில் நேர்கோடுகளில் விதைக்க வேண்டும். வரிசையில் விதைக்கப் பட்ட கிழங்குகள் அடுத்த வரிசையில் விதைத்த கிழங்குகளுக்கு நேராக இல்லாமல் இரண்டு கிழங்குகளுக்கு மையமாக விதைக்க வேண்டும். இதனால் வேர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
மண்ணில் எப்போதும் ஈரத்தன்மை இருக்குமாறு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைத்த முதல் இரண்டு மாதங்களுக்கு 5 செ.மீ. உயரம் தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும். பிறகு 10 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் நிறுத்த வேண்டும். விதைத்த ஒரு மாதத்திலும் பிறகு இரண்டு மாதங்கள் இடைவெளியிலும் ஐந்து அல்லது ஆறு முறை களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும் போதும் வரும் வசம்பு வேர்களை காலால் மிதித்து ஆழமாக மண்ணில் அழுத்திவிட வேண்டும். இதனால் கிழங்குகளின் வளர்ச்சியினை துரிதமடையச் செய்யலாம்.
மாவுப்பூச்சிகள் இலைகளையும் வேர்களையும் அதிகம் தாக்கும். இதனைக் கட்டுப்படுத்த பச்சை மிளகாய் 250 கிராம், இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுத்து 300 மிலியை 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும்.
அறுவடை:
விதைத்த ஒரு ஆண்டில் வேர்களை அறுவடை செய்யலாம். அறுவடை செய்வதற்கு முன் வயலில் உள்ள நீரை வடித்து மண்ணை சிறிதளவு காயப்போட வேண்டும். பிறகு இலைகள் பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்துவிடும். இப்பொழுது 60செ.மீ. ஆழத்தில் 60 முதல் 90 செ.மீ. வரை அகலமாக வளர்ச்சி பெற்றிருக்கும் கிழங்குகளை மண்ணைத் தோண்டி கிழங்கு மற்றும் வேர்களை அறுவடை செய்யலாம்.
இந்த சமயத்தில் கிழங்குகள் மண்ணிற்கடியில் வேர்களை கவனமாகத் தோண்டி எடுத்த 5 முதல் 7 செ.மீ. நீளத்தில் வெட்ட வேண்டும். சல்லி வேர்கள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். தண்ணீரில் கிழங்குகளைக் கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். உலர்த்தப்பட்ட கிழங்குகளின் மேல் உள்ள செதில் பகுதியை நீக்குவதற்காக சாக்குப்பையில் போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும்.
மகசூல்:
ஒரு எக்டருக்கு சராசரியாக 10 டன் உலர்ந்த கிழங்குகள் கிடைக்கும்.