Asianet News TamilAsianet News Tamil

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்! கண்கொத்தி பாம்பாக இருங்கள்! இபிஎஸ் கொடுத்த அலர்ட்!

வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.

Vote counting centers should be monitored... Edappadi Palanisamy tvk
Author
First Published Apr 20, 2024, 2:27 PM IST

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: அதிமுக 1972-ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது. 

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு; மாண்புமிகு அம்மா அவர்களைத் தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம்  அதிமுக.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளுக்கும், கோடானு கோடி கழக உடன்பிறப்புகளுக்கும், முகவர்களுக்கும், அதேபோல், கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும்; கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும்; கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios