Asianet News TamilAsianet News Tamil

பா.ஜனதா எம்.பி.க்கு எதிராக அவதூறு வழக்கு - நோட்டீஸ் அனுப்பினார் நடிகர் பிரகாஷ் ராஜ்

Prime Minister Modi was criticized as the best actor.
Prime Minister Modi was criticized as the best actor.
Author
First Published Nov 23, 2017, 5:58 PM IST


தனிப்பட்ட முறையில் தனக்கு எதிராக அவதூறாகவும், அவமானப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மைசூரு-குடகு எம்.பி. பிரதாப் சிம்ஹாவுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் அவதாறு வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கர்நாடக மூத்த பத்திரிகையாளரும், முற்போக்கு சிந்தனையாளரும், இந்து வலது சாரி இயக்கத்துக்கு எதிராக எழுதி வந்தவரான கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் மாதம் மர்மநபர்களால் அவர் வீட்டு முன்சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பா.ஜனதா கட்சிக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரதமர் மோடியை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள்தான் கவுரி லங்கேஷ் கொலையை ரசிக்கிறார்கள். 

பிரதமர் மோடி சிறந்தநடிகர் என்று விமர்சித்து இருந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பா.ஜனதா கட்சியை குறித்து கடுமையாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்தார்.

இதனால், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மைசூரு-குடகு எம்.பி. பிரதாப் சிம்ஹா நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராகவும் தனிப்பட்ட முறையிலும் விமர்சிக்கத் தொடங்கினார்.

“ கடந்த 2004ம் ஆண்டு பிரகாஷ் ராஜின் மகன் இறந்துவிட்டான். மனைவியை தவிக்கவிட்டு, அவர் ஒரு பெண்  நடன இயக்குநர் பின்னால் சுற்றி வருகிறார். இப்படிப்பட்ட நபரான பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத் குறித்து பேச என்ன உரிமை இருக்கிறது? தகுதி இருக்கிறது?.

கன்னடத்தில் அவர் பெயர் பிரகாஷ் ராய். ஆனால்,தமிழகத்தில் நடிக்கச் சென்றவுடன் அவர் தன்னுடைய பெயரை பிரகாஷ் ராஜ் என மாற்றிக்கொண்டார். தனதுதேவைக்கு அடையாளத்தை மாற்றிக் கொள்கிறார் பிரகாஷ் ராஜ் என்றாவது காவிரி பிரச்சினைக்காக கர்நாடகத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறாரா? என்று பேஸ்புக்கிலும், தொலைக்காட்சிகளிலும் எம்.பி. விமர்சனம் செய்துவந்தார்.

இதையடுத்து, எம்.பி. பிரதாப் சிம்ஹாவுக்கு எதிராக அவதாறு வழக்கு தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மைசூரு-குடகு எம்.பி. பிரதாப் சிம்ஹாவுக்கு எதிராக அவதாறு வழக்கு தொடர்ந்து எனது வழக்கறிஞர் நவீன் நாகர்ஜூன் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். இந்த நோட்டீஸ் அவர் சார்ந்திருக்கும் கட்சியின் அடிப்படையில் அல்ல, அவர் என்னை தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட வாழ்க்கையை அவதூறாகப் பேசியதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள் ஓட்டுப்போட்டு தேர்வானவர்கள் இன்று வெட்கமே இல்லாமல், மற்றவர்களை சமூக வலைதங்களில் தொந்தரவு செய்கிறார்கள். இது எனது தனிப்பட்ட வாழ்வில் சிக்கலை ஏற்படுத்துகிறது. எனது வேதனை பகிர்ந்துகொள்ளும்போது, அவர் என்னை தொந்தரவு செய்யப்படும், அவரின் ஆதரவாளர்கள் என்னை தொந்தரவு செய்யட்டும். 

பிரதாப் சிம்ஹா என்னை மட்டுமல்ல, மறைந்த மூத்த அரசியல்வாதி மஹாதேவா பிரசாத்தின் மனைவியையும் இதுபோல் அவதாறாகப் பேசி, அவர் மேடையிலேயே அழுது கண்ணீர் விட்டுள்ளார்.

பிரதாப் சிம்ஹா தொகுதியில் உள்ள பெண்களையும், அவரை பின்தொடரும் இளைஞர்களையும் நினைத்தால் கவலையாக இருக்கிறது. நமக்கு சமூக ஊடகங்கள் தேவை. விவாதங்கள் தேவை. அதற்காக தரம்தாழ்ந்து செல்லாதீர்கள். சமூக கட்டமைப்பை அழிக்காதீர்கள். எனது நோட்டீஸ்க்கு முறையான விளக்கம் அளித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோராவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுப்பேன்.

இன்றுள்ள அரசியல் சூழலில் ஒருவரை இணையதளம் வழியாக, தொந்தரவு செய்வது, அவதூறு பரப்புவதையும், மிரட்டல்விடுப்பதையும் அரசியல் கட்சிகளே ஊக்குவிக்கின்றன. இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில், அதற்கு எதிராக நான் பேசுவேன். இதற்கு முன்பே நான் கேள்விகேட்கத் தொடங்கிவிட்டேன்.என் வீட்டுக்கு அருகே, கவுரிலங்கேஷ் கொல்லப்பட்டதில் இருந்து கேள்வி கேட்பத அவசியம் என உணர்ந்தேன்.

அதற்காக நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அர்த்தம் இல்லை. முதலில் இந்த நாட்டுக்கு நேர்மையான குடிமகனாக இருக்க விரும்புகிறேன். அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இப்போது இல்லை

இவ்வாறு அவர் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios