Asianet News TamilAsianet News Tamil

அண்ணன் அழகிரி தெரியாது என்கிறார்... தளபதியோ அவசர கதியில் திரும்பியிருக்கிறார்... என்ன நடக்கிறது கோபாலபுரத்தில்!

politics in between azagiri and stalin by the time of modis gopalapuram visit
politics in between azagiri and stalin by the time of modis gopalapuram visit
Author
First Published Nov 7, 2017, 7:04 PM IST


உடல் நலம் குன்றி வீட்டில் இருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியை நேற்று இரு வேறு பணிகள் நிமித்தமாக சென்னைக்கு வந்த பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இது திடீர் சந்திப்பு என்பதும், திடீர் திட்டமிடல் என்பதும் தெரிந்தது தான். 

இந்நிலையில்,  அண்ணன் அழகிரி, தனக்கு விவரம் தெரியாது... தெரிந்தால் நானும் உங்களை என் வீட்டில் வைத்து வரவேற்றிருப்பேன்... என்று பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்த தளபதி ஸ்டாலினோ, ஷார்ஜாவில் தனது ஒருநாள் பயணத்தை முன்னதாகவே முடித்துக் கொண்டு அவசர கதியில் ஓடி வந்திருக்கிறார்... 

பிரதமர் மோடி, திமுக., தலைவர் கருணாநிதியைச் சந்தித்திருப்பதில் என்ன அரசியல் இருக்கும் என்று எதிரெதிர் துருவங்களான கட்சிக்காரர்கள் பேசிக் கொண்டிருக்கும் அரசியலை விட, இப்போது குடும்ப அரசியல் பலமாகப் பேசப்படுகிறது. 

ஸ்டாலின் சென்னையில் இருந்துவிட்டார். அழகிரியோ மதுரையில் கோலோச்சினார். அப்படியும் முன்னர் மத்திய அமைச்சரவையில் திமுக., அங்கம் வகித்த போது, மத்திய அமைச்சராக இருந்து தில்லியில் வலம் வந்தார் அழகிரி. சென்னையில் இருந்து மாநில அரசியலைப் பார்த்துக்  கொண்டார் ஸ்டாலின். 

இடையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் இருவருக்குள் பனிப்போர் மூண்டு இருவரும் வெவ்வேறு திசையில் திரும்பிவிட்டனர். ஆனாலும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதையும் மீறி, தனது பகுதியில் அரசியலைத் தொடர்ந்து நடத்தி வந்தார் அழகிரி. கடந்த வாரம் ஸ்டாலின் மதுரையில் இருந்த போது, சென்னைக்கு வந்து கோபாலபுரத்தில் தந்தை கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் அழகிரி. 

இப்படி இருவரும் இருந்துவரும் நிலையில்தான், பிரதமர் மோடியின் கோபாலபுரம் விசிட் நடந்தது. அந்த நேரத்தில் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தார். ஆனால், முந்தைய நாள் கிடைத்த திடீர் தகவலை அடுத்து, தனது பயணத்தை ஒருநாள் முன்னதாகவே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் ஸ்டாலின். 

கூப்பிடு தூரத்தில் மதுரையில் இருக்கும் இன்னொரு மகன் அழகிரி, தனக்கு பிரதமர் மோடி தன் வீட்டுக்கு வரும் செய்தி தெரியாது என்ற ரீதியில், அவருக்குக் கடிதம் எழுதி, தன் குடும்ப அரசியல் விவகாரத்தை வெளிப்படுத்தி வேடிக்கை பார்த்துள்ளார்.

தமிழகத்தில் மோடி கால் பதிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய ஸ்டாலின், மோடி மற்றும் பாஜக.,வுக்கு எதிர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், தன்னை திமுக.,வில் இருந்து ஓரங்கட்டியபோது, தனிக்கட்சி என்றெல்லாம் ஈடுபடாமல், பாஜக.,வுடன் நட்புறவைக் கொண்டிருந்தார் அழகிரி. அவர் பாஜக.,வில் சேரக்கூடும் என்றெல்லாம் கூட செய்திகள் அப்போது பரவின. 

இப்போதும் கூட மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் அழகிரி. இதை அடுத்தே இந்த நன்றிக் கடிதமும் எழுதி அனுப்பப் பட்டுள்ளது. பார்ப்போம்... அழகிரியின் அடுத்த அதிரடி அரசியல் எப்படி இருக்கப் போகிறது என்று!

Follow Us:
Download App:
  • android
  • ios