கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வெளுத்து வாங்கிய சீனா அதிபர் ஜி ஜின்பிங்; வைரல் வீடியோ!!
இந்தோனேசியாவின் பாலியில் G20 மாநாட்டின் நிறைவு அமர்வின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் சந்தித்து தங்களது உள்நாட்டு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து இருந்தனர்.
இதை பத்திரிக்கைகளில் கசிய விட்டதாகக் கூறி ஜஸ்டின் ட்ரூடோவை நேருக்கு நேர் ஜி ஜின்பிங் கடிந்து கொண்டார். இத்தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. "பத்திரிகைகளில் செய்தி கசிந்தது சரியானது அல்ல" என்று ஜி ஜின்பிங் கூறியவுடன் இடைமறித்த ஜஸ்டின் ட்ரூடோ, ''கனடாவில், நாங்கள் சுதந்திரமான மற்றும் திறந்த மற்றும் வெளிப்படையான உரையாடலை நம்புகிறோம், அதையே நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். சீனா மிகப் பெரிய பொருளாதாரத்தை உலகளவில் கொண்டுள்ளது. நாங்கள் ஆக்கப்பூர்வமாக இணைந்து பணியாற்றுவதைத் தொடருவோம்'' என்றார்.
சீனாவுக்கும், கனடாவுக்கும் இடையே கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து பிரச்சனை நீடித்து வருகிறது. சீனாவில் உளவு பார்ப்பதாகக் கூறி இரண்டு கனடா நாட்டு அதிகாரிகளை சீனா கைது செய்தது. இதைத் தொடர்ந்து ஹூவாய் டெக்னாலஜிஸ் அதிகாரியை கனடா கைது செய்தது. இவர்கள் அனைவரும் கடந்தாண்டு விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சுமூகமான சூழல் இருநாடுகளுக்கும் இடையே நிலவி வந்தது. தற்போது மீண்டும் கனடா நாட்டின் உள் விவகாரங்களில் சீனா தலையிடுகிறது என்பது ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
எல்லா ரகசியமும் லீக்.. கனடா பிரதமரை வெளுத்து வாங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங் - வைரல் வீடியோ !