எடப்பாடி பழனிசாமி கைதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது!!
எடப்பாடி பழனிசாமியின் கைது செய்யப்பட்டு இருப்பதைக் கண்டித்து கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையும் மீறி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
எடப்பாடி பழனிசாமியின் கைதைக் கண்டித்து மதுரை மாநகர் அதிமுகவின் சார்பில் மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் ராஜா தலைமையில் மாநகர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு ஊர்வலமாக கட்சி கொடிகளை ஏந்தியவாறு கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாறு செல்லத் துவங்கியதால் பரபரப்பு நிலவியது.
போலீசார் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் தேவர் சிலை அருகே சென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வாகனத்தில் அதிமுகவினரை ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதிமுகவினரின் சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க..சசிகலா - டிடிவி தினகரன் ‘திடீர்’ சந்திப்பு.. ஜெயலிதாவின் மரணம் இப்படித்தான்! சீக்ரெட் சொன்ன டிடிவி