Rozgar Mela 2022: பிரதமர் மோடி பதவியேற்ற பின் வேலை வாய்ப்பின்மை குறைந்துள்ளது; மத்திய அமைச்சர் கோவையில் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 115 நகரங்களில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவையில் 103 இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் இளைஞர்களுக்கு ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசு பணி வழங்கும் விழா இன்று நாடு முழுவதும் நடந்தது. மொத்தம் 115 நகரங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இணையத்தின் வழியாக பிரதமரின் உரை ஒளிபரப்பப்பட்டது. முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டன. கோவையில் இந்த நிகழ்ச்சி பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 103 பேருக்கு பணி நியமனஆணைகள் வழங்கப்பட்டன. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் நாராயண சுவாமி, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில், ''காசு சம்பளம்னாலும், அரசாங்க காசு வேணும்னு சொல்ற பழமொழிக்கு ஏற்ப இன்று பலர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நானும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தி கற்று வருகிறேன். இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு தேவைப்படுகிறது. மோடி ஆட்சி ஏற்ற பிறகு திறன் மேம்பாட்டுக்கு என்று ஒரு துறையை உருவாக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசாங்க பணி என்பது மக்களுக்கு சேவை ஆற்ற கடவுள் கொடுத்த வாய்ப்பு என்பதை இளைஞர்கள் உணர்ந்து பணியாற்ற வேண்டும்' என்றார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் நாராயண சாமி பேசுகையில், ''தீபாவளி பரிசாக 75000 இளைஞர்களுக்கு பிரதமர் இன்று வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்கியுள்ளார். பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உத்வேகம் அளித்து வருகிறார். முத்ரா யோஜனா திட்டம் மூலம் லட்சம் கோடி ரூபாய் 50 கோடி இளைஞர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அக்னி பத் திட்டம் மூலம் பணி வழங்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பின்மை என்பது மோடி பதவி ஏற்ற பின்பு குறைந்துள்ளது. நிர்வாகம் மற்றும் செயல்படுத்துதலில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பங்காற்ற வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம்'' என்றார்.
இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!