Su Venkatesan : பாஜகவிற்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம்.? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேஷன்
நாடாளுமன்ற வாசலில் இருந்த தேசத்தந்தை காந்தியின் சிலையையும் அண்ணல் அம்பேத்கரின் சிலையையும் அகற்றிவிட்டு, எங்கோ ஓர் அருங்காட்சியகத்திலிருந்த செங்கோலை எடுத்துவந்து அவையின் மையத்தில் நிறுவியுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு சு வெங்கடேசன் பதில்
செங்கோல் தொடர்பாக மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் பேசிய பேச்சை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், இதற்கு சு.வெங்கடேஷன் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மையின் குறியீடு. நேர்மைக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை தமிழர்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் உ. பி.யிலும் ஒடிசாவிலும் தமிழர்களை அவமானப்படுத்தியவர்கள்தானே நீங்கள்” என்று பேசினேன்.
ஆனால் நீங்களோ “செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு” என்று நான் சொன்னதை வசதியாக மறைத்துவிட்டு மன்னராட்சியின் குறியீடு என்பதையும் மன்னர்கள் தங்களது அந்தப்புரத்தில் பெண்களை அடிமையாக வைத்திருந்தனர் என்பதையும் மட்டும் விமர்சித்திருக்கிறீர்கள். செங்கோல், அறத்தின், நேர்மையின் குறியீடு என்பதைப்பற்றிப் பேசாமல் தவிர்த்ததன் மூலம் பா.ஜ.க.வின் நேர்மையின்மையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
அரசியல் சாசனத்தை அகற்ற நினைத்தீர்கள்
நாடாளுமன்ற வாசலில் இருந்த தேசத்தந்தை காந்தியின் சிலையையும் அண்ணல் அம்பேத்கரின் சிலையையும் அகற்றிவிட்டு, எங்கோ ஓர் அருங்காட்சியகத்திலிருந்த செங்கோலை எடுத்துவந்து அவையின் மையத்தில் நிறுவுகிறீர்கள். நாடாளுமன்றத்தில் நாற்பதடி உயரத்திற்கு சாணக்கியனின் உருவத்தைப் பொறிப்பதும் நாடாளுமன்றத்தின் ஆறு வாசலுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர்சூட்டுவதும் தற்செயலல்ல. உங்களது இந்துத்துத்துவா மதவெறித்தத்துவம் உங்களை வழிநடத்துகிறது. அதற்குத் தடையாக இருக்கும் அரசியல் சாசனத்தை நீங்கள் அகற்ற நினைக்கிறீர்கள்.
திரு. அண்ணாமலை அவர்களே, மதுரை மாநகராட்சி மேயர் பொறுப்பேற்ற பொழுது அவரிடம் கொடுக்கப்பட்டது குடியாட்சியின் குறியீடான இந்திய அரசுச்சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல்; நாடாளுமன்றத்தில் உள்ளதைப்போன்று மத அடையாளங்கொண்ட செங்கோல் அல்ல. நீங்கள் நாளையே மதுரை மாநகராட்சியின் கூட்ட அரங்கிற்கு செல்லுங்கள். அங்கு அச்செங்கோல் இருக்காது. அது கருவூல அறையில் வைக்கப்பட்டிருக்கும். செங்கோலைக் குறியீடாக பயன்படுத்துவதற்கும் அதனை அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக நிலைநிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.
பிரதமரிடம் இந்த நாடு போராடிக்கொண்டிருக்கிறது
இந்த 18 ஆவது நாடாளுமன்றத்திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய பிரச்சனை வந்து நிற்கிறது. தெய்வப்பிறவி என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர், மன்னராட்சிக்கால அடையாளத்தை கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஜனநாயக நாட்டின் பிரதமராக வீற்றிருக்கிறார். ஒரே நேரத்தில் தன்னைத் தெய்வப்பிறவியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமரிடம் இந்த நாடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டத்தின் உண்மையையும் நேர்மையையும் மக்கள் அறிவார்கள்.
“அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்துகொண்டு நான்தான் எல்லாமுமாக இருக்கிறேன் என உலகுக்கு அறிவித்துக்கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளது”. வரலாற்றுச் சக்கரம் எப்போதும் முன்னோக்கியே நகரும். காலத்தை பின்னுக்கிழுக்க நினைப்பவர்களின் அகந்தை நிலைக்காது. இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூகநீதியின் காலம், சமத்துவத்தின் காலம் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.