EPS ADMK : டெல்லிக்கு எடப்பாடி திடீர் பயணம்.? திமுகவிற்கு செக் வைக்க களத்தில் இறங்கிய அதிமுக நிர்வாகிகள்
திமுக அரசுக்கு எதிராக திடீர் விஷ்வரூபம் எடுத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தாக குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும்,. அப்போது திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவிற்கு தலைவலியை ஏற்படுத்திய விஷச்சாராய மரணம்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றிய வெற்றியை கொண்டாடவிடாமல் செய்து விட்டது கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம். இந்த விஷச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு சார்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்பி முதல் அந்த பகுதியில் காவல்நிலையத்தில் பணியாற்றிவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் கள்ளச்சாராய விற்பனையில் திமுகவிற்கு தொடர்பு இருப்பதாகவும், திமுக அமைச்சர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சரா..? இல்லை பொய்வளத்துறை அமைச்சரா.? பால் முகவர்கள் கேள்வி
டெல்லி செல்லும் எடப்பாடி
இதனையடுத்து அதிரடியாக களத்தில் இறங்கிய அதிமுக, கள்ளச்சாராய மரணம் தொடர்பாக போராட்டம், உண்ணாவிரதம், ஆளுநரிடம் புகார், நீதிமன்றத்தில் வழக்கு என கள்ளக்குறிச்சி பிரச்சனையை கையில் எடுத்தது. இந்தநிலையில் அடுத்ததாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அதிமுக தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் நேரம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக
அப்போது அதிமுக சார்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் டெல்லி சென்று திமுக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக புகார் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிபிசிஐடி விசாரணையின் மூலம் கள்ளக்குறிச்சி வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றி உண்மையான தகவல்கள் வெளியே வர வாய்ப்பு இல்லை எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்படும் என தெரிகிறது.