சாதி மறுப்பு திருமணம்... அலுவலகம் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கும்பலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
நெல்லை மாநகர் பகுதியில் உள்ள ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாளையங்கோட்டைப் பகுதியில் வசிக்கும் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த காதம் ஜோடிகள் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் இருவருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணை பல இடங்களில் தேடிவந்த பெண் வீட்டார், அப்பெண்ணுக்கு கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் முடித்து வைக்கப்பட்டது தெரிந்து அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டு அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கும்பலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் நேற்றைய தினம் (ஜூன் 13, 2024) திருமணம் செய்து கொண்டனர். இன்று (ஜூன் 14, 2024) மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர்.
தமிழிசையுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: என்ன காரணம்?
இதனை பெண் வீட்டார் தரப்பில் தடுத்த நிலையில் பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினர். காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில், பந்தல் ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் முன்பாகவே மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனை தடுக்கச் சென்ற அருள்ராஜ் மற்றும் முருகன் இருவரையும் தாக்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கும்பலில் சிலரை பிடித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக்கிய கும்பலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து சாதி ஆணவப்படுகொலை நடந்து வருவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி ஊழியர்களை காயப்படுத்தியுள்ளார்கள். இச்சம்பவத்தை தமிழக காவல்துறை அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் - சம்பந்தப்பட்ட காதல் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அழுத்தமாக வற்புறுத்துகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.