Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு முப்பெரும் விழா ஒரு கேடா? அண்ணாமலை சாடல்!

வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என திமுகவின் முப்பெரும் விழாவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்

BJP President annamalai criticized DMK Mupperum Vizha in Coimbatore smp
Author
First Published Jun 13, 2024, 4:45 PM IST

கோவை மாநகரில் சரியான சாலைகள் கூட அமைக்காமல் மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது முப்பெரும் விழா ஒரு கேடா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கோவையில் வரும் ஜூன் 15 அன்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். முதலில், ஜூன் 14 அன்று நடத்தவிருப்பதாக முடிவு செய்யப்பட்ட இந்த விழா, பண மோசடி வழக்கில், திமுக முன்னாள் இலாகா இல்லாத அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது, கடந்த ஆண்டு அதே ஜூன் 14 நாளில்தான் என்பதால், நாற்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில், விழாவை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறது என்பதையும் அறிந்தேன். வாழ்த்துக்கள்.

மின்சாரக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியும், நூதன முறையில் கட்டண உயர்வைக் கொண்டு வந்து, கோவை பகுதி சிறு குறு தொழிற்சாலைகளை முடக்கி, பொதுமக்கள் வாழ்வாதாரத்தை அழித்தும், ஒரு துறை விடாது அத்தனை தொழில்துறைகளிலும் கமிஷன் கலெக்ஷன் என அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், கோவை மாநகரில் சரியான சாலைகள் கூட அமைக்காமல் மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது முப்பெரும் விழா ஒரு கேடா? என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது. 

கல்வியிலும், தொழில்துறையிலும் கோலோச்சிய கோவை, திமுக ஆட்சியில் செயலிழந்து இருக்கிறது. கடந்த முப்பது வருடங்களாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்து, திமுகவின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற வரி மட்டும் தவறாமல் இடம்பெறும். ஆனால், திட்டத்தை நிறைவேற்ற திமுக எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கௌசிகா நதியும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. ஆனால் திமுகவுக்கு அவை குறித்துக் கவலை இல்லை. திமுக அரசின் மின்கட்டண உயர்வால், விசைத்தறித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கியிருக்கிறது. ஆனால், தன் வாரிசுக்கு முடிசூட்ட, விழா எடுப்பதில் மும்முரமாக இருக்கிறார் முதலமைச்சர். 

பக்தர்கள் தரிசனத்துக்காக பூரி ஜெகநாதர் கோவிலின் 4 கதவுகளும் திறப்பு!

கோவை மாநகருக்கு உடனடித் தேவை, சாலை வசதிகளும், தண்ணீர்ப் பஞ்சத்துக்கான தீர்வுகளும்தான். அதுபோக, மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை. இதில் முப்பெரும் விழா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து, கோவையை மேலும் குப்பைக் கிடங்காக ஆக்குவதுதான் இந்த விழாவின் விளைவாக இருக்கப் போகிறது.

உண்மையிலேயே திமுகவுக்கு, கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கோவை மக்களின் அறுபது ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். கோவை பகுதி நீர்நிலைகளைச் சீரமைத்து, தண்ணீர்ப் பஞ்சத்தைத் தடுத்திருக்க வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள கம்யூனிஸ்ட் அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுத்திருக்க வேண்டும். தென்னை விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். சாலைகளை சீரமைத்து, விபத்துகள் நடப்பதைத் தடுத்திருக்க வேண்டும்.

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழக பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், பத்தில் ஒரு பங்கை திமுக அரசு நிறைவேற்ற முன்வந்தாலே, கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும். ஆனால், அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios