Chess Olympiad 2022: நாடு முழுவதும் பயணித்து கோவை வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமோக வரவேற்பு..!
நாடு முழுவதும் பயணித்து கோவை வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன.
ஜூலை 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடக்கிறது. 29ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. 186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்கள் நேற்று முதல் சென்னை வர தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட்: மாமல்லபுரத்தில் ஒத்திகை செஸ் போட்டி..! 6 வயது சிறுமியும் 60 வயது முதியவரும் மோதிய சுவாரஸ்யம்
முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பை தமிழகம் பெற்றிருப்பதால், செஸ் ஒலிம்பியாட்டை உலகமே வியக்குமளவிற்கு நடத்தி அசத்தும் வகையில் தமிழக அரசு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் 28ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பயணித்த செஸ் ஒலிம்பியாட் ஜோடி, கோவை வந்தடைந்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி பேரணியை கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார். செஸ் ஒலிம்பியாட் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டது. இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட ஜோதி இன்று கோவை வந்தடைந்தது.
இதையும் படிங்க - WI vs IND: அக்ஸர் படேல் காட்டடி அரைசதம்.. 2வது ODIயிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா
கோவையில் அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர் என மொத்தம் 2500க்கும் அதிகமானோர் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மலர்தூவி அமோக வரவேற்பளித்தனர். கோவை கொடிசியாவில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக ஜோதி திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.