கொந்தளித்த புதுவை; சிறுமியின் உடலுக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் வைத்தி குப்பம் பாப்பம்மாள் கோவில் இடுகாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார். காவல் துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் சுமார் 72 மணி நேரம் கழித்து சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிறுமியின் உடல் அப்பகுதியில் உள்ள ஓடையில் இருந்து மீட்கப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிறுமியின் உடலை நேற்று மாலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். அஞ்சலிக்காக வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சோலை நகர் வீட்டில் இருந்து சிறுமியின் உடலுக்கு சடங்குகள் செய்து முடிக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினர் திரளாக கலந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுது ஆர்த்தியை வழி அனுப்பி வைத்தனர். முத்தியால்பேட்டை, சோலை நகர் வழியாக வைத்தி குப்பம் பாப்பம்மாள் கோவில் இடுகாட்டை அடைந்த சிறுமியின் உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி மாநில சமூக ஆர்வலர்கள் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும், போதைப் பொருள் நடமாட்டத்தை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர். இந்த இறுதி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் வழி நெடுக குவிக்கப்பட்டு இருந்தனர்.