Karnataka election 2023: கர்நாடகா தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம்; அப்படி என்றால் என்ன?

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 

Uniform Civil code in Karnataka election 2023 manifesto; what is it?

கர்நாடகா தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று வெளியிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும், பெங்களூருக்கு மாநிலத் தலைநகர் மண்டலக் குறியீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தேர்தல் அறிக்கையை பெங்களூருவில் இன்று அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, கட்சியின் மூத்த தலைவர் பிஎஸ் எடியூரப்பா ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர். 

செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, ''ஏசி அறையில் அமர்ந்த இந்த தேர்தல் அறிக்கையை நாங்கள் தயாரிக்கவில்லை. கட்சியின் தொண்டர்கள் மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் சென்று இந்த அறிக்கையை தயாரித்து இருக்கின்றனர். மாநிலத்தில் பாஜகவின் பார்வை "அனைவருக்கும் நீதி, அனைவரையும் சமாதானப்படுத்துவதுதான்.  மாநில அரசு "அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான" முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது'' என்றார். 

இனி விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு காலம் அவசியமில்லை.. உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை, முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, கர்நாடகாவில் அரசியல் செல்வாக்கு பெற்ற இரண்டு சாதியினரான லிங்காயத்துகளுக்கும், ஒக்கலியர்களுக்கும் சமமாக பங்கி அளித்தனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து இருந்தனர். இதையடுத்தே உச்ச நீதிமன்றம் தலையிட்டு வரும் மே 9ஆம் தேதி வரை இடஒதுக்கீடு தடையை நிறுத்தி வைத்துள்ளது.

இத்துடன், ''மாநிலத்தில் பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்டு இருக்கும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் மீது விமர்சனம்; ஜெகன் மோகன் ரெட்டி பகிரங்க மன்னிப்பு கேட்க சந்திரப்பாபு நாயுடு வலியுறுத்தல்!!

இன்று நேற்றல்ல, ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோதில் இருந்து இன்று வரை இந்தச் சட்டத்தை கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களில் தடைபட்டு வருகிறது. அப்படிப்பட்ட சட்டம் மீண்டும் கர்நாடகாவில் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக 1985-ல் சாஹாபானு என்ற 73 வயது பெண்ணை அவரது கணவர் முகமதுகான் ஷரியத் சட்டப்படி விவாகரத்து செய்கிறார். அதுவும் நாற்பது திருமண வாழக்கைக்குப் பின்னர் விவாகரத்து செய்து விடுகிறார். சாஹா பானுவின் கணவர் வழக்கறிஞராக இருந்தும் அவருக்கு ஜீவனாம்சம் வழங்க முன்வரவில்லை. பின்னர் நீதிமன்றத்தை நாடி ஜீவனாம்சம் பெற்றார்.  

இதன் மூலம் பெண்ணுக்கு நீதி கிடைத்து இருக்கிறது என்று பார்ப்பதுடன் பாதிக்கப்படும் அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற சட்ட கண்ணோட்டத்தில் பொது சிவில் சட்டம் பார்க்கப்பட்டது. இத்துடன் பெண்களுக்கு சொத்துரிமை என்பது தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தான் கிடைக்கிறது. இந்த மாநிலங்களில் சட்டமே இருக்கிறது. ஆனால், பல மாநிலங்களில் சட்டம் இல்லை.  

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி முஸ்லிம் ஆண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் இல்லை. ஆனால், இந்துக்கள் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, இரண்டாம் திருமணம் செய்தால் தண்டிக்கப்படுகிறார். குற்றமும், தண்டனையும் மாறுபடுகிறது. இதேபோன்று நாட்டில் பல்வேறு மதங்களுக்கு பல்வேறு திருமண சட்டங்கள் இருக்கின்றன. முஸ்லிம் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நினைக்கும்பட்சத்தில் அதைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமில்லை. முஸ்லீம் திருமண முறிவு மற்றும் ஜீவனாம்சத்தை பொருத்தவரை, பிற மதத்தில் இருக்கும் பெண்களைப் போன்று பாதுகாப்பு இல்லை. சமூக, பொருளாதார பாதுகாப்பு கிடைப்பதில்லை.

இந்தியாவில் இந்து, இஸ்லாம், சீக்கியர்கள் என்று பலரும் தங்களது மத வழிபாடுகளை, சடங்குகளை பின்பற்றி வருகின்றனர். சட்டம் மாறுபடுகிறது. உரிமைகளும் வேறுபடுகிறது. இதை சமன் செய்யவே பொது சிவில் சட்டம் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால், இதற்கு கடுமையான எதிர்ப்பும் உள்ளது. இந்த நிலையில்தான், கர்நாடகா தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios