13 மாவட்டங்களுக்கு அலர்ட்.! மழை இன்று வெளுத்து வாங்கப்போகுது.! வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் சென்னை வெயிலின் பிடியில் இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
5 மாவட்டங்களில் நாளை கன மழை
நாளைய தினம் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vegetables Price : தக்காளி விலை என்ன.? கோயம்பேட்டில் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.?
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் வருகிற 23ஆம் தேதிவரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் இன்று தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.