Feb 12, 2023, 4:01 PM IST
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி. அப்போது பேசிய அவர், அதானி குடும்பத்தை சேர்ந்த 22 பேர் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். அதில் தவறான பண பரிவர்த்தனை செய்துள்ளளார்கள். தவறான பண பரிவர்த்தனை என கூறி மாற்று கட்சியினரை மத்திய நிறுவனங்கள் விசாரிக்கின்றன.
ஆனால் அதானியை விசாரிக்கவில்லை. அதானி குறித்து பிரதமர் வாய்திறக்கவில்லை.காங்கிரஸ் கட்சியை குறை சொல்லும் பிரதமர் தவறு செய்து இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதானி குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.அதானி விவகாரத்தில் மோடியின் பங்கு அதிகமாக இருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதானிக்கு புதுச்சேரிக்கும் தொடர்பு இருக்கிறது. காரைக்கால் துறைமுகத்தை பினாமியாக அதானி எடுத்துள்ளார்.
கோவையை சேர்ந்த ஓங்கார என்ற நிறுவனத்தை நடத்தும் கோவை சக்திவேல் துறைமுகத்தை எடுத்து பின்னர் அதானிக்கு மாற்றியுள்ளார். புதுச்சேரி அரசின் அனுமதியின்றி இது நடந்து இருக்கிறது. புதுச்சேரிக்கு நிதி கொடுப்பதாக மத்திய அரசு கூறுவது மர்ம குகை போல் இருக்கிறது என்றும், உள்ளே சென்று பார்த்தால் ஒன்றுமில்லை. மத்திய அரசு நிதி அளித்திருப்பது குறித்து மேடை போட்டு பேச முதல்வர் ரங்கசாமி தயாரா என்று கேள்வி எழுப்பினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு செல்லும் வரை மாநில அந்துஸ்து வராது.
நான் மத்திய அமைச்சராக இருந்த போது 13 ரயில் கொண்டு வந்தேன் என்றும், 8 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சியில் ஒரு ரயில் கூட புதுச்சேரிக்கு வரவில்லை என நாராயணசாமி கூறினார். என்.ஆர்.காங்-பாஜக என்பது கட்டாய திருமணம். இது எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து ஆகும். காரைக்காலில் நல்லம்பள் பகுதியில் ரயில்வே திட்டத்திற்கும் சாலை அமைப்பதற்கும் மணல் அள்ளுவதில் கோடி கணக்கில் ஊழல் நடக்கிறது.
இதற்கான பங்கு அங்குள்ள அமைச்சருக்கும், இங்குள்ள முதல்வர் அலுவலகத்திற்கும் பங்குள்ளது. இதில் மாவட்ட ஆட்சியரும் சிக்குவார். புதுச்சேரியில் சாமி ஆட்சி நடப்பதால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என முதல்வர் ரங்கசாமி குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாராயணசாமி, நானும் சாமி தான். அந்த சாமி கட்சியால் என்னை ஒன்று செய்ய முடியாது என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்
இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!