உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி நகரைச் சேர்ந்தவர் செல்வதான்(52). இவரது மூத்த மகன் ஹேமச்சந்திரன்(26). பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். உடல் பருமன் அதிகமாக இருந்த ஹேமச்சந்திரன், தனது எடையை குறைக்கவேண்டும் என்பதற்காக யூடியூப் மூலமாக மருத்துவர்களை தேடியுள்ளார். அப்போது சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் 22ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவறான சிகிச்சை தந்ததால் இளைஞர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் பம்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக, தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை தமிழக மருத்துவத் துறை அமைத்தது. அந்த விசாரணை குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அத்துடன், இந்த விவகாரத்தில் இளைஞருக்கு சிகிச்சை அளித்த தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத் துறை உத்தரவிட்டது. மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை களைந்து சுகாதாரத் துறையை நாடினால், மீண்டும் ஆய்வு செய்து மருத்துவமனையை திறக்க அனுமதி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: சத்யபிரத சாகு தகவல்!
இந்த நிலையில், மருத்துவமனையின் உரிம ரத்தை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த பி.பி.ஜெயின் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்தது செல்லாது என உத்தரவிட்டார்.
மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்காமல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நீதிபதி, மருத்துவமனைகள் கார்பரேட்டுகளாக மாறிய நிலையில் குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவமனைகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.