தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: சத்யபிரத சாகு தகவல்!
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுவர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், 6 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்ட நிலையில், 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுவர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500க்கும் மேற்பட்டோர் ஈடுபடவுள்ளனர். அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும்.” என்றார்.
ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர்தான்: அடித்துச் சொல்லும் தமிழிசை!
முன்னதாக, வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள் இயக்கம், வாக்கு எண்ணிக்கைக்கான அடிப்படை ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தமிழகத்தை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை சீல் வைக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு, 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்புடன், வேட்பாளர்களின் முகவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.