திமுகவுக்கு புதிய பெயர் வைத்து வார்னிங் கொடுத்த அண்ணாமலை!

By vinoth kumar  |  First Published Jan 24, 2025, 7:31 PM IST

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், இதனால் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 


இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதுமே, கனிமவளங்கள் கொள்ளைப்போவது தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுகவின் ஆசியுடன், கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்களைக் கடத்தி, கேரளாவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையுமே அழித்துவிட்டுத்தான் ஓய்வார்கள் என்பது போல அவர்கள் நடவடிக்கை இருக்கிறது. 

தமிழகத்தில் கனிமவளங்களைப் பாதுகாக்கப் போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், கனிமவளக் கொள்ளையர்களை எதிர்த்துப் புகார் அளித்த சமூக ஆர்வலர்ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். கனிமவளக் கொள்ளையைப் பற்றி புகார் அளித்து வீடு திரும்பும் முன், கொள்ளையர்களுக்கே புகாரைக் கசியவிட்டு,  சமூக ஆர்வலர்களின் உயிரைப் பறிக்கும் வகையில் ஒரு காட்டாட்சியை நடத்தி வருகிறது இந்த Disaster மாடல் திமுக அரசு. 

Latest Videos

இதையும் படிங்க: திமுக நிர்வாகியாச்சே பாசம் இருக்கத் தானே செய்யும்! வீடியோவுடன் அண்ணாமலையிடம் வசமாக சிக்கிய அப்பாவு!

திமுக ஆதரவோடு செயல்படும் புதுக்கோட்டை மற்றும் கரூர் கும்பல், கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளிடம், கமிஷன் வசூலித்துவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் கற்களை வெட்டி எடுப்பதோடு, அனுமதிச் சீட்டுக்களையும் முறைகேடாகப் பயன்படுத்தி, கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில், தொடர்ந்து பல விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதோடு, அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும், தமிழகத்தைச் சுரண்டுவதையே தொழிலாக வைத்திருக்கிறது திமுக. 2006 - 2011 வரையிலான காலகட்டத்தில், திமுகவினர் செய்த நில அபகரிப்பால், புதியதாக ஒரு விசாரணைத் துறையே உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

தற்போது, தமிழகம் முழுவதும் மலைகளை உடைத்து, மணலைத் திருடி, கனிம வளங்களைச் சுரண்டி, எதிர்காலத்தில் தமிழகத்திற்கு பருவமழை வருவதையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தங்கள் தோல்வி உறுதி என்பதை அறிந்து, தேர்தலின்போது, பணத்தை வாரி இறைக்க முடிவு செய்திருக்கும் திமுக, அதற்காக, பொதுமக்களையும், கனிமவளக் கொள்ளையை எதிர்ப்பவர்களையும் அச்சுறுத்தி, மிரட்டி, கொலையும் செய்து, கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக் கும்பலின் வசூலைத்தான் நம்பியிருக்கிறது என்பது, கனிமவளக் கொள்ளையை திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பதில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது. 

இதையும் படிங்க: பத்துவரி பதிவைக் கூட சொந்தமாக எழுத தைரியல! சந்தி சிரிக்கிறது! இபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்தது யார் தெரியுமா?

தங்கள் குடும்பத்துக்காக, பொதுமக்களைத் துன்புறுத்திக் கொள்ளையடித்த பல சர்வாதிகாரிகள், இறுதியில் பொதுமக்கள் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் காணாமல் போன பல வரலாறுகளை நம் காலத்திலேயே பார்த்திருக்கிறோம். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. வரும் 2026ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது இந்த  Disaster மாடல் திமுக ஆட்சியின் கனிகவளக் கொள்ளையர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் திமுகவினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கனிவளக் கொள்ளை மூலம் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் அத்தனை சொத்துக்களும் சட்டப்படி மீட்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

click me!