மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக வாக்களிக்க வழிவகை செய்யும் பொருட்டு வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை இலவச போக்குவரத்து வசதிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி, மற்றவர்கள் 8,467 என மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேரும், 80 வயதுக்கு மேல் 6,14,002 லட்சம் பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆண் வேட்பாளர்கள் 874, பெண் வேட்பாளர்கள் 76 பேர் என மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலை பாதுகாப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. மேலும், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக வாக்களிக்க வழிவகை செய்யும் பொருட்டு வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை இலவச போக்குவரத்து வசதிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியத் தேர்தல் ஆணையம், மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பொதுப் போக்குவரத்து வசதி இல்லையெனில், அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யலாம் எனவும், தகுதியுள்ள வாக்காளர்களுக்கு இந்த வசதிகளைப் பெறுவதற்கு சக்ஷம் செயலி அல்லது உதவி எண்ணில் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படலாம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
காலநிலை மாற்றம்: ஒரே நாளில் கொட்டித் தீர்த்த மழை - வளைகுடா நாடுகளுக்கு எச்சரிக்கை மணி!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று, சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும், வாக்குப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லத்திலிருந்து வாக்குச் சாவடிக்கும், வாக்குச்சாவடியிலிருந்து இல்லத்திற்கும் இலவசமாக சென்று வர போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட வசதிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் “சக்ஷம் கைபேசி செயலி”/ 1950 உதவி எண்/ மாவட்டக் கட்டுப்பாட்டு அறையில் கோரிக்கையை முன்வைத்து, வாக்களிக்க ஏதுவாக இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.