சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தோல்வி- இபிஎஸ் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 3வது நாளாக இன்று காலை அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தில் தோல்விக்கு காரணம் என்ன.? நிர்வாகிகளின் செயல்பாடு உள்ளிட்டவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பேசிய நிர்வாகிகள், கூட்டணி பலமாக அமைக்காதது , பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாததே தோல்விக்கான காரணம் என பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சசிகலா, ஓபிஎஸ்க்கு வாய்ப்பு இல்லை
இறுதியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 2026 தேர்தலில் வெற்றி பெறும் வகையில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் எனவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் அமைத்து பணிகளை தொடங்குங்கள் என அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாம் என சில நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.