வன்னியர் சங்க தலைவர் காளிதாசன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த நின்னைக்காட்டுரைச் சேர்ந்த வன்னியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காளிதாசன் நேற்று கொடியவர்கள் சிலரால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பதை அறிந்து வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நின்னைக்காட்டூரைச் சேர்ந்த காளிதாசன் துடிப்பான தொண்டர் ஆவார். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்கும், வன்னியர் சங்கத்தின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைத்தவர்.
அரசியலில் உயரங்களைத் தொட வேண்டிய அவர், இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காளிதாசனை கொடிய முறையில் படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
எனக்கு பாடம் எடுக்காதீங்க.. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி லட்சியம்.! அதிமுகவை அலறவிடும் அண்ணாமலை
ஆனால் காளிதாசனை கொலை செய்வதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த சதிகாரர்களை காப்பாற்றும் நோக்குடன், பெயரளவில் மட்டும் சிலரை கைது செய்து விட்டு வழக்கை முடிக்கத் துடிக்கின்றனர். குற்றவாளிகளைக் காப்பாற்ற காவல்துறை முயலக்கூடாது. காளிதாசன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.