மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக மருத்துவர்களுக்கும் ஊதியம்; நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி அன்பும

By Velmurugan s  |  First Published Mar 6, 2024, 10:46 PM IST

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் பல்வேறு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த அவர், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக 2009&ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2021&ஆம் ஆண்டு பிப்ரவரி 17&ஆம் நாள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து விட்ட நிலையில், அதை செயல்படுத்துவது குறித்து அடுத்த 6 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

7&ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்கநிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான். ஆனால், ஐந்தாவது ஆண்டிலிருந்து இந்த ஊதியம் மாறுபடத் தொடங்குகிறது. இதற்குக் காரணம் மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய  ஆண்டுகளின் இறுதியில் தான் வழங்கப்படுவது தான். இதனால் 14-ஆம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20-ஆவது ஆண்டில் தான் பெறுகின்றனர்; 14-ஆவது ஆண்டில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ரூ.86,000 மட்டுமே கிடைக்கிறது.

Latest Videos

சிறுமியை கொலை செய்த மிருகங்களுக்கு 1 வாரத்தில் தண்டனை - தமிழிசை ஆக்ரோஷம்

இந்த முரண்பாடுகள் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அவற்றை களைய வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தமிழக அரசும் மறுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 2021&ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட பரிந்துரை மீது தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று நீதிபதி வினா எழுப்பினார். அதற்கு விடையளித்த தமிழக அரசு, பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதால் தான் பரிந்துரைகளை செயல்படுத்த முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தது.

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு வாக்குறுதி அளிப்பது இது முதல் முறையல்ல. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திய போது, அவர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான குழு, 354-ஆவது அரசாணையின் எதிர்கால சரத்துகளின்படி  5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைத்தது. அவற்றை ஆய்வு செய்து விரைந்து முடிவு எடுக்கும்படி உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையும் ஆணையிட்டது. அதன்பிறகும் இரு முறை மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்; அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், தமிழ்நாடு அரசு, மருத்துவர்களின் கோரிக்கைகளை இப்போது வரை நிறைவேற்றவில்லை.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப் பட்டு வருகிறது. அவர்களுக்கு இணையான கல்வித்தகுதியும், பணிச்சுமையும் கொண்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.

நாமக்கல்லில் 10000 போதை மாத்திரைகள் பறிமுதல்; 15 கூலி தொழிலாளர்கள் கைது

எனவே, இனியும் தாமதிக்காமல் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான குழுவின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிவதற்குள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு  வந்து விடக் கூடும் என்பதால், அதை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். எனவே, கெடு முடியும் வரை காத்திருக்காமல், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!