தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள் , 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கூறினார்.
வாக்குப்பதிவு நேரம் என்ன.?
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் , டோக்கன் பெற்ற கடைசி வாக்காளர் வரை வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் 68, 321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள் , 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என குறிப்பிட்டார். 39 வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மொத்த வாக்காளர்கள் 6.23 கோடி .18 முதல் 19 வயதிலான முதல் முறை வாக்களிப்போர் 10.92 லட்சம் பேர் என தெரிவித்தார். தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர் , 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக கூறினார். 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் தேர்தலுக்கு பின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
சி விஜில் செயலி மூலம் 4861 புகார்கள் பெறப்பட்டு , 22 புகார்கள் மட்டும் நிலுவையில் உள்ளன. 3855 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் மற்ற 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். வாக்குப்பதிவின் போது சுமார் 1 லட்சம் தமிழக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார். மேலும் 12 ,220 முன்னாள் ராணுவ வீரர்கள் , 1931 ஓய்வுபெற்ற காவலர்கள் , கேரளா ஆந்திராவில் இருந்து 3500 காவலர்களும் , ஆந்திரா , தெலங்கானாவில் இருந்து ஊர்க்காவல்படையினரும் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாக்குப்பதிவு நாளில் தமிழகத்தில் மொத்தமாக 1.3 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
வாக்களிக்காதவர்கள் மீது நடவடிக்கை.?
85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் , மாற்றுத்திறனாளிடமிருந்து 1,08,804 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள் , கர்ப்பிணிப் பெண்கள் வாக்குச் சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கும் வகையில் முன்னுரிமை தரப்படும் என கூறினார். வாக்குப்பதிவு குறைவாக உள்ள நிலையில் வாக்களிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், வாக்களிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட விதிகள் எதுவும் இடமில்லை என தெரிவித்தார்.