கோவை தனியார் கல்லூரியில் முனைவர் பட்ட மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்திய பின்பும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட முனைவர் பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதன்சங்கர். இவரிடம் முனைவர் பட்ட படிப்பு மேற்கொள்ளும் மாணவர் ஒருவர் மதன்சங்கர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக பாரதியார் பல்கலை கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.சி.சி கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருப்பது உறுதியானது.
இதைதொடர்ந்து கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவரான மதன்சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஐசிசி கமிட்டி விசாரணை அறிக்கையும், பாதிக்கப்பட்ட மாணவருக்கும், கல்லூரி டீனும் இடையே நடைபெற்ற ஆடியோவும் வெளியாகியது.
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு 3 பெண்கள் கைது
இதில் மாணவரை , பேராசிரியர் மதன்சங்கர் சமரசபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது. விசாரணை அறிக்கையில் முனைவர் பட்ட மாணவரை இந்தோனேசியா, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கல்லூரி டீன் மதன்சங்கர் பாலியல் தொந்தரவு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்திய பின்பும் கல்லூரி டீன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓன்றரை ஆண்டு காலமாக பேராசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறினார் எனவும் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பேசும் வழக்கம் கொண்டவர் அவர் எனவும், அவர் சொல்லும் படியாக கேட்காமல் இருந்தால் கையெழுத்து போட மாட்டார் எனவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார். ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்தி முடித்திருக்கும் நிலையில், டீன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குளக்கரைக்கு வரும் காதல் ஜோடிகள் தான் டார்கெட்; 4 இளைஞர்களை பொறி வைத்து தூக்கிய காவல்துறை
அவர் ஆசிரியர் பணியில் இருக்க கூடாது, பிற மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது, ஏற்கனவே இவரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, முதல் கட்ட விசாரணை நடைபெற்று முடிந்து இருப்பதாகவும், அடுத்தகட்ட விசாரணைக்கு பின்பு சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். கல்லூரியில் முதல்வருக்கு அடுத்த நிலையில் இருந்த டீன் மதன்சங்கர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.