மாமல்லபுரத்தில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சென்னை வர தொடங்கியுள்ளனர்.
தடகளத்திற்கு எப்படி ஒலிம்பிக்கோ, கிரிக்கெட்டுக்கு எப்படி உலக கோப்பையோ, அப்படித்தான் செஸ் விளையாட்டுக்கு செஸ் ஒலிம்பியாட். 43 செஸ் ஒலிம்பியாட் தொடர்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் 28ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் நடக்கிறது.
முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் தொட ர் இப்போதுதான் நடக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலகமே வியக்கும் அளவிற்கு செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு, அதற்காக சர்வதேச தரத்தில் மாமல்லபுரத்தில் அரங்குகளை அமைத்துள்ளது.
இதையும் படிங்க - வணக்கம்.. வெல்கம் டூ சென்னை..! செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வெளியீடு.. வீடியோ
தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுக்க செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. செஸ் ஒலிம்பியாட்டில் 186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளதால், அவர்களை வரவேற்று, தங்கவைத்து, வழிநடத்த சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது தமிழக அரசு.
வெளிநாட்டிலிருந்து சென்னை வரும் செஸ் வீரர்களை தங்கவைக்க சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஹோட்டல்களை புக் செய்துள்ளது தமிழக அரசு. அவர்களை விமான நிலையத்திலிருந்து ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்வதில் எந்த சிக்கலும் தடையும் இல்லாத அளவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளது தமிழக அரசு.
இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட்: நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி செஸ் விளையாடி மாணவ, மாணவியர் அசத்தல்
வரும் 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இன்னும் 5 நாட்களே எஞ்சியிருப்பதால், வெளிநாட்டு வீரர்கள் சென்னை வர தொடங்கிவிட்டனர். மடகாஸ்கர் தீவிலிருந்து 4 வீரர்கள், ஹங்கேரி, ஜாம்பியா ஆகிய நாடுகளில் இருந்து 2 வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை அழைத்துச்செல்ல நியமிக்கப்பட்டிருந்த தமிழக அரசு அதிகாரிகள் குழு அவர்களை ஹோட்டல்களுக்கு அழைத்துச்சென்றனர்.