பிரஜ்வல் ரேவண்ணா குற்றச்சாட்டுக்கு டி.கே.சிவக்குமார் பதில்!

By Manikanda Prabu  |  First Published May 28, 2024, 10:28 AM IST

பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றச்சாட்டுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்


முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரஜ்வல் ரேவண்ணாவை நாடு கடத்தி உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. விசாரணை மேற்கொள்வதற்காக, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா புதிய வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், அப்பா, அம்மா, தாத்தா, குமாரண்ணா, நாட்டு மக்கள் மற்றும் ஜே.டி.எஸ். தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள அவர்,“வெளிநாட்டில் இருந்தபோது யூடியூப் செய்திகள் மூலம் என் மீதான குற்றச்சாட்டைப் பார்த்தேன். பாலியல் தொடர்பான புகாரில் என்னுடைய பெயரை அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறார்கள்.” என கூறியுள்ளார். மேலும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு வருகிற 31ஆம் தேதி ஆஜராக உள்ளதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக அரசியல் சதி செய்வதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றச்சாட்டுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரஜ்வல் ரேவண்ணா என்ன வேண்டுமானாலும் பேசலாம். அவர் எதையும் கூற அவருக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் அவர் நாடு திரும்பியவுடன் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும்.” என்றார்.

தன் மீதான குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியின் சதி என்ற பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவக்குமார், “பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ குறித்து என்னிடம் அதிக தகவல்கள் இல்லை, ஆனால் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் என்ன கூறினாலும் பரவாயில்லை. விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.” என்று கூறினார்.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணாவை பற்றி ராகுல் காந்தி பேசியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. ராகுல் காந்தி மீதான அவரது குற்றச்சாட்டிற்கு காலம் பதில் சொல்லும் எனவும் டி.கே.சிவக்குமார் கூறினார்.

திடீரென சரிந்த மேடை: கூலாக டீல் செய்த ராகுல் காந்தி!

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது பாலியல் லீலைகள் அடங்கிய 2976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் துன்புறுத்தல்களில் அரசு அதிகாரிகள் முதல் சாமானியர்கள் வரை பல்வேறு பெண்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அவரது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தை மீறுதல் தொடர்பான குற்றங்களுக்காக ஐபிசி 354A, 354D, 506, மற்றும் 509 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!