டெல்லியில் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த ஆசிரியரை, 14 வயது மாணவன் ஒருவர் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவனை, ஒரு வீடியோவை வைத்து அந்த ஆசிரியர் மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, மதியம் 2.15 மணியளவில் டெல்லி ஜாமியா நகரில் உள்ள, பாட்லா ஹவுஸில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியின் ஒரு அறையில் இருந்து இரத்தம் வருவதாகவும், அறை திறந்திருப்பதாகவும் போலீசாருக்கு அழைப்பு வந்தது என்று தென்கிழக்கு டெல்லி டிசிபி ராஜேஷ் தியோ ஊடங்களுக்கு அளித்த பேட்டியல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் தரையில் ஒருவர் கிடப்பதைக் கண்டுள்ளனர். இறந்து கிடந்தவர் ஜாகீர் என்ற ஆசிரியர் என்றும், அவர் அந்த நகரில் தான் தனது குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், முதற்கட்ட விசாரணையில், ஜாகீர் என்ற அந்த ஆசிரியர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுவனை சந்தித்ததாகவும், பின்னர் பல சந்தர்ப்பங்களில் அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கண்டறிந்தனர்.
மேலும் அந்த சிறுவனின் அந்தரங்க வீடியோவை படம்பிடித்து அதன் மூலம் அவரை மிரட்டி வந்துள்ளார் அந்த ஆசிரியர். மேலும் தன் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று அந்த நபர் அந்த மாணவனை அடிக்கடி மிரட்டியுள்ளார் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொலை நடந்த அன்று, ஜாமியா நகர் வீட்டில் அந்த மாணவனை சந்திக்க வேண்டும் என்று அவரது ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும். ஆசிரியரின் பாலியல் தொல்லையை தாங்க முடியாத அந்த மாணவன், ஒரு கூர்மையான காகித கட்டர் எடுத்து சென்று, அடுக்குமாடி குடியிருப்பை அடைந்து அந்த நபரின் கழுத்தை அறுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பழிவாங்கும் நோக்கில் கூரிய ஆயுதத்தால் கொலை செய்ததாகக் கூறப்படும் அந்த 14 வயது சிறுவன், கொலை நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு தற்போது விசாரணை நடந்து வருகின்றது.