ஆண்களை விட்டு அவர்களுடைய துணை பிரிந்து செல்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு உறவில் அன்பு, அக்கறை, காதல், காமம், மரியாதை போன்ற பல விஷயங்கள் முக்கியமான கருதப்படுகிறது. ஒருவரை உயிராக நேசிப்பதும், நேசிக்கப்படும் தான் வாழ்தலை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. எல்லாமே இந்த அன்புக்காக தானே! கொஞ்சம் கரிசனம் காட்டும் மனிதர்களிடம் நம் மனம் இளகிவிடுகிறதில்லையா? ஆனால் தாம்பத்தியம் என்று வரும்போது அதற்கு கூடுதல் மெனக்கெடல்கள் தேவைப்படுகிறது. சில காரணங்களுக்காக துணையை தூக்கி எறியவும் தயங்குவதில்லை.
உறவின் நிலைப்புத்தன்மை!!
நீங்கள் ஒருவரை பயங்கரமாக காதலித்தாலும் அல்லது உங்களை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தாலும் உறவின் தொடக்கத்தில் எல்லாமே சுபமாகத்தான் இருக்கும். ஆனால் காலம் செல்ல செல்ல அந்த உறவில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போல தோன்றும். இதற்கு உறவின் ஆரம்ப கட்டத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பின்னர் கொடுக்கப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இவன் நம்முடையவன் தானே அல்லது இவள் நமக்கு சொந்தமானவள் தானே என்ற நம்பிக்கை முழுமையாக ஏற்படும்போது, அந்த உறவில் அலட்சியம் தலை தூக்குகிறது. இந்த சமயத்தில் கவனமாக இல்லாவிட்டால்... உங்களுடைய உறவு முடிவு புள்ளிக்கு வந்துவிடும்.
உரையாடல்
எந்தவொரு உறவிலும் புரிதல் அவசியமான ஒன்று. நல்ல புரிதல் ஏற்பட அங்கு உரையாடல் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் சூழல் இருக்க வேண்டும். தம்பதிகள் தங்களுக்குள் சரியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளவில்லை என்றால் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த உறவில் ஆரோக்கியமான உரையாடல் இல்லையோ அந்த உறவு முறிய வாய்ப்பு அதிகமுள்ளது.
பிம்பம்
உங்கள் துணையின் மோசமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்வது உறவில் விரிசலை உண்டாக்கலாம். எப்போதும் உங்கள் துணையை தவறாக புரிந்து கொள்வது அல்லது தவறாக நினைத்து முடிவெடுப்பதால் அந்த உறவில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். உங்கள் துணையை குறித்து நல்ல பிம்பத்தை உருவாக்காமல் மோசமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளுவது உறவை முடிவை நோக்கி கொண்டு செல்லும்.
எதிர்ப்பார்ப்பு
எந்த உறவிலும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் கொண்டு போய் தான் நிறுத்தும். சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகளை உருவாக்கி உங்கள் துணையிடம் திணித்தால் அந்த உறவு விரைவில் மூடுவிழா காணும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியான நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள் இருக்கும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.
மரியாதை
எவ்வளவுதான் அன்பை அள்ளிக் கொடுத்தாலும் மரியாதையை கொஞ்சம் கூட கொடுக்காத துணையுடன் வாழ்வது கடினம். நீங்கள் உங்களுடைய துணையை மதிக்காவிட்டால், அவருடைய சுயமரியாதைக்கு இழுக்கு வரவழைத்தால் அவர்கள் உங்களை பிரிந்து சென்றுவிடுவார்கள். காதலுக்கும், இல்லறத்துக்கும் மரியாதையும் நேர்மையும் மிக மிக அவசியம்.
இதையும் படிங்க: இரவில் நிர்வாணமாக தூங்க விரும்பும் கணவர்.. சங்கடப்படும் மனைவி! அட்ஜஸ்ட் செய்யனுமா? நிபுணர் பதில்..
உடல் நெருக்கம்
உணர்வுரீதியான எல்லா விஷயங்களையும் பூர்த்தி செய்யும் துணையாக இருந்தாலும், உடல் ரீதியான விஷயங்களை பூர்த்தி செய்யாமல் விட்டால் பிரிவுக்கு வழிவகுக்கும். உங்களுடைய துணையை தென்றலாக தீண்டவும் தெரிந்திருக்க வேண்டும். படுக்கையில் புயலாக புரட்டவும் புரிந்திருக்க வேண்டும். அப்படியென்றால் உங்கள் துணை காந்தம் போல உங்களையே ஒட்டிக் கொள்வார்.
தனித்த இடம்
உங்கள் துணைக்கென்று தனித்த இடத்தை கொடுக்காமல் இருப்பது உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்தலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லட்சியம், முன்னுரிமைகள் இருக்கும். வாழ்வில் துணைக்கென்று தனித்துவமான முக்கியத்துவம் கொண்ட இடத்தை ஏற்படுத்த வேண்டும். அதைப் போல அவர்களுடைய லட்சியத்தை நோக்கிய பயணத்திற்கு இடையூறு செய்யக் கூடாது.
இங்கு குறிப்பிட்ட விஷயங்களில் நீங்கள் அலட்சியமாக நடந்து கொள்ளும் ஏதேனும் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுடைய துணையை இழக்காமல் அவருடன் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் இதை அனுபவிச்சிருக்கீங்களா?