பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இங்கு, சிறைகளில் உள்ள கைதிகள், தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் இரண்டு மணி நேரம் செலவிட அனுமதி அளித்துள்ளது.
ஆனால், நீண்ட நாட்களான சிறையில் இருந்த, நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறை வளாகத்தில் உள்ள குளியலறையுடன் கூடிய தனி அறையில் ஒரு கைதி தனது இணையருடன் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் திருமண பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய அனுமதியின் மூலம், கைதிகளின் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, சிறைக் கைதிகளின் நன்னடத்தையும் அதிகரிக்கும். அதோடு, இத்தகைய அனுமதி 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். ஆனால், கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது.