ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள்
தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேர நியாய விலை கடைகள் 26 ஆயிரத்து 502 உள்ளது. பகுதிநேர கடைகள் 10,452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 954ஆக உள்ளது. இந்த கடைகளில் மக்களுக்கு மானிய விலையில் உணவுப்பொருட்களை அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரிசி, பச்சரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சக்கரை, பாமாயில் என வழங்கப்பட்டு வருகிறது.
உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு
ஆனால் கடந்த சில மாதங்களாக சரியான முறையில் துவரம்பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் உரிய வகையில் கிடைக்கவில்லையென புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு சார்பிலும் உணவு பொருட்கள் சரியான முறையில் வழங்கப்பட்டு வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை காரணமாக உணவு பொருட்களுக்கான டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்.? ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி தொடங்கியதா.?
மாதத்தின் கடைசி நாள்
இந்தநிலையில் உணவுப்பொருட்களின் டெண்டர் விடப்பட்ட நிலையில் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. தற்போது உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.
31ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படும்
ஆனால் இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்ற 31.08.2024 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.