புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்.? ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி தொடங்கியதா.?
தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் கோரி சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காத்துள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, குடும்ப அட்டை முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் புதிய அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஸ்மார்ட் கார்டு- காத்திருக்கும் மக்கள்
தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேர நியாய விலை கடைகள் 26 ஆயிரத்து 502 உள்ளது. பகுதிநேர கடைகள் 10,452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 954ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பன்முக பயன்பாடு கொண்டவை ஆகும்.
நியாயவிலைக்கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் அவை பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும்.
புதிய அட்டைக்காக 3 லட்சம் பேர் காத்திருப்பு
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு குடும்ப அட்டை எண்ணும் வழங்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் புதிதாக ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் கோரி சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பத்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காத்துள்ளனர். இந்தநிலையில் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்ட பிறகு குடும்ப அட்டை முக்கிய ஆதாராகமாக அமைந்துள்ளது.
மக்களே உஷார்! குரங்கு அம்மையின் அறிகுறிகள் இதுதான்... தடுப்பூசி இருக்கா? இல்லையா?
மகளிர் உதவி தொகை பெற முக்கிய ஆதாராம்
இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஸ்மார்ட் கார்டிற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இன்னும் புதிய அட்டை வழங்கும் பணி தொடங்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் லட்சக்கணக்கான மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளையும், உரிமைகளையும் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
புதிய அட்டைக்காக 2.80 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறும் நோக்குடன் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்மார்ட் கார்டு- விரைவில் அறிவிப்பு
இந்தநிலையில் இது தொடர்பாக அரசு தரப்பில் கேட்ட போது, புதிய கார்டு கேட்டு சுமார் 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சரியான நபர்களை கண்டறியும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது