கரூரில் இளம்பெண் நடன கலைஞரை நடனம் ஆடுவதாக அழைத்து வந்து பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கிய நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் கடந்த ஐந்து வருடங்களாக மேடை நடன கலைஞராக இருந்து வருகிறார். நடனம் ஆடுவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்து கொண்டிருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரூர் தொழில் பேட்டை பகுதியில் தனது நடன குழுவிற்காக தங்கி உள்ளார். இந்நிலையில், திமுகவைச் சார்ந்த மதி என்பவர் கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொழில்பேட்டை பகுதியில் அலுவலகமும், வீடும் எடுத்து தங்கியுள்ளார்.
கரூர் வந்த இளம் பெண் மதியிடம் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நிலேஸ் என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் மதிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் நிலேசும், இளம் பெண்ணும் வேறு மாவட்டத்திற்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
இதனை அறிந்த மதி அவர்களை கடந்த 17ஆம் தேதி இளம் பெண்ணிடம் அன்பாக பேசி மீண்டும் கணவன், மனைவி இருவரையும் கரூர் அழைத்து வந்துள்ளார். கரூர் வந்த பிறகு கணவன், மனைவி இருவரையும் வெவ்வேறு இடங்களில் தனி தனியாக அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார். மேலும் அப்பெண்ணை நகைகளை திருடி விட்டதாக கூறி தனி இடத்தில் அடைத்து வைத்து அவரின் ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தி அதனை வீடியோ எடுத்து அடித்து மிரட்டி உள்ளார்.
மதியும், அவருடன் இருந்து சிலரும் அப்பெண்ணை கடுமையாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களாக தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கி உள்ளனர். மேலும் கர்ப்பிணியாக உள்ள அப்பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்ததாகவும், இதனால் அப்பெண் மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்த மற்றொரு நடன கலைஞர் ரகசியமாக அப்பெண்ணின் தாயாரை தொடர்பு கொண்டு, உங்கள் மகளை அழைத்துச் சென்று விடுங்கள். இங்கு அடித்து கொன்று விடுவார்கள் என தகவல் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்; கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்; தப்புமா அதிமுக?
இதனையடுத்து அப்பெண்ணின் தாயார் கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொழில் பேட்டையில் உள்ள மதியின் நடன கலைஞர்கள் பயிற்சி இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது கணவரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.