பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறை கிடந்ததுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள ஒரு பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்கள் கிடந்துள்ளது. இது தொடர்பாக, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் சமோசாக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட ஒரு துணை ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும், மற்ற மூவர் இதேபோன்ற புகாருக்குள்ளாகி தகுதிநீக்கம் செய்யப்பட்ட மற்றொரு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது சமோசா சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த மூவரும் சதித்திட்டம் தீட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கேன்டீனுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் ஒப்பந்தத்தை கேடலிஸ்ட் சர்வீஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் எடுத்துள்ளது. அந்த நிறுவனம் மனோகர் எண்டர்பிரைசஸ் என்ற மற்றொரு துணை ஒப்பந்த நிறுவனத்திற்கு சமோசா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சமோசாக்களை சாப்பிட முயன்ற போது, அதில் ஆணுறைகள், கற்கல், குட்கா ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பேரில், மனோகர் எண்டர்பிரைசஸ் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில், ஃபிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் என அடையாளம் காணப்பட்ட இரண்டு தொழிலாளர்கள், சமோசாக்களில் ஆணுறை, குட்கா மற்றும் கற்களை அடைத்ததாக கண்டறியப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் சிஸ்டம்: தேர்தல் ஆணையம் முடிவு!
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தாங்கள் எஸ்ஆர்ஏ எண்டர்பிரைசஸின் ஊழியர்கள் என்றும், அந்த நிறுவனத்தின் கூட்டாளிகளால் மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உணவுகளில் கலப்படம் செய்ய அனுப்பப்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
எஸ்ஆர்ஏ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிற்றுண்டிகளில் பேண்டேஜ் காணப்பட்டதால், அதன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால், அந்நிறுவனத்தின் கூட்டாளிகளான ரஹீம் ஷேக், அசார் ஷேக் மற்றும் மஜர் ஷேக் ஆகியோர் மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயலை செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.