Asianet News TamilAsianet News Tamil

Shankar : சிறையில் சவுக்கு சங்கர்.. அதிகாரிகள் தாக்கியதில் 2 இடங்களில் எலும்பு முறிவு - வழக்கறிஞர் புகார்!

Savukku Shankar : சவுக்கு சங்கரை சிறையில் அதிகாரிகள் தாக்கியதில் அவருக்கு கையில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் Youtuber சவுக்கு  சங்கரை, சிறை வார்டண்கள் தாக்கியதாகவும், இதில் அவர் காயம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து இன்று அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், சவுக்கு சங்கரின் வலது கையில் இரண்டு எலும்புகள் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில்,  சிறையில் இருக்கக்கூடிய ஒரு சிறைவாசிக்கு மருத்துவ உதவி என்பது கிடைப்பது கேள்விக்குறியாக இருப்பதாக தெரிவித்தார். 

சிறை வளாகத்திலேயே அனைத்து உபகரணங்களும், மருத்துவ வசதிகள் இருந்தும், பழிவாங்கும் நோக்கில் கோவை மத்திய சிறை நிர்வாகம் சவுக்கு சங்கரை இப்படி மருத்துவ உதவி கிடைக்காமல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் தனது கட்சிக்காரர் சவுக்கு சங்கரை சிறை நிர்வாகம் தாக்கியது தற்போது உண்மை என தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். 

மேலும் இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாக கூறினார். கோவை, திருச்சி ,தேனி ஆகிய நகரங்களில் தலா ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று சென்னையில் இரண்டு வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அனைத்தையும் சட்டபூர்வமாக சந்திப்போம் என்றார் அவர்.

Video Top Stories