வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு புது செக் வைக்கும் கூகுள் - இனிமே இப்படி செய்ய முடியாதா?
கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு விரைவில் கட்டுப்பாடு விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு கூகுள் டிரைவில் அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கும் நடைமுறை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபோன்களில் வாட்ஸ்அப் பேக்கப்களை வைத்துக் கொள்ள ஐகிளவுடில் குறிப்பிட்ட ஸ்பேஸ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் பேக்கப் செய்து கொள்ள இதுவரை கூகுள் டிரைவ் அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கி வருகிறது.
விரைவில் பயனர்கள் தங்களின் பேக்கப் அளவை சிறப்பாக மேம்படுத்த வாட்ஸ்அப் சில மாற்றங்களை மேற்கொள்ளலாம் என தெரிகிறது. இதற்கான அப்டேட் உருவாக்கப்பட்டு வருவதாக வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை ஆய்வு செய்யும் WAbetainfo தெரிவித்துள்ளது.
அதன்படி கூகுள் டிரைவ் எப்போது முழுமையாக நிரம்ப இருக்கிறது, கொடுக்கப்பட்ட அளவை முழுமையாக பயன்படுத்த இருப்பவர்களுக்கு முன்கூட்டியே நோட்டிஃபிகேஷன் வழங்குவதற்கான குறியீடுகள் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை வாட்ஸ்அப் செயலியில் சாட் பேக்கப் செய்யும் போது வரும் என கூறப்படுகிறது. இத்துடன் சில வகையான தரவுகளை பேக்கப் செய்ய வேண்டாம் என்பதை பயனர்கள் தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படலாம்.
கூகுள் டிரைவில் தற்சமயம் வழங்கப்பட்டுள்ள 15GB இலவச ஸ்டோரேஜை விட வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு அதிக ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்றே தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு கூகுள் டிரைவ் அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.