மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம் - உக்ரைனில் கூகுள் மேப்ஸ் முக்கிய அம்சத்தை தடை செய்த கூகுள்
உக்ரைனில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் மிகமுக்கிய அம்சங்களை செயலிழக்கச் செய்து இருக்கிறது.
ஆல்ஃபாபெட் இன்க் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் கூகுள், உக்ரைனில் கூகுள் மேப்ஸ் சேவையின் சில அம்சங்களை செயலிழக்க செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் போக்குவரத்து குறித்த நேரலை விவரங்களை வழங்கும் அம்சங்களை கூகுள் மேப்ஸ் செயலியில் தற்போது உக்ரைனில் பயன்படுத்த முடியாது.
உள்நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி உணவகங்கள் மற்றும் கடைகளில் எவ்வளவு நெரிசல் உள்ளது என்ற நேரலை விவரங்களை கூகுள் மேப்ஸ் வழங்காது. அந்நாட்டு உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூகுள் தெரிவித்து இருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தொடர்ந்து அந்நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
முன்னதாக போர் நடைபெற்று வரும் பகுதிகளில் பொது மக்கள் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன. இதுதவிர ஆப்பிள் தனது சேவைகளை ரஷ்யாவில் வழங்குவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி என உக்ரைன் தொழில்நுட்ப அமைச்சர் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு கடிதம் எழுதி இருந்தார்.