Asianet News TamilAsianet News Tamil

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்

Whenever DMK comes to rule power cut is an unwritten rule alleges edappadi palanisamy smp
Author
First Published May 6, 2024, 3:58 PM IST

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை காலத்தில் விவசாயப் பணிகளுக்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் பாசனத்துக்கு மின் மோட்டார்களை நம்பியுள்ளனர். எனது தலைமையிலான அதிமுக அரசு, விவசாய பம்பு செட்டுகளுக்கு 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்கியது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் ஆரம்பம் முதலே வழங்கப்பட்டு வந்தது. எனவே, அதிமுக ஆட்சிக் காலத்தில் குறுவை சாகுபடி பாதிப்படையவில்லை. ஆனால், 2023-ம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில், காவிரி நீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் குறுவை சாகுபடிக்கு திமுக அரசு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்காததால், டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்தனர். தற்போது விவசாயத்துக்கு 24 மணி நேரம் வழங்க வேண்டிய மும்முனை மின்சாரத்தை, திமுக அரசு 8 மணி நேரம் மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் தொடர்ச்சியாக வழங்காமல் முறை வைத்து வழங்கப்படுகிறது.

அதிலும் பல நேரங்களில் ‘லோ வோல்டேஜ்’ மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாய மின் மோட்டார்கள் பழுதடைந்து மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால், விவசாயிகள் தங்களது கண்முன்னே பயிர்கள் கருகுவதைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். திமுக அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்குக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, கோடை கால பயிர்களைக் காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றும்; அதுவும் ‘லோ வோல்டேஜ்‘ போன்ற குறைந்த மின் அழுத்தத்தில் மின்சாரம் வழங்காமல், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை அடுத்த பருவமழை தொடங்கும் வரை விவசாயப் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 15க்கு தள்ளி வைப்பு: உச்ச நீதிமன்றம்!

இந்த திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட குடிமராமத்துத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தியது. குடிமராமத்து திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி இருந்தால் நீர் ஆதாரங்களில் மழை நீர் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. இந்தக் கோடையில் தாய்மார்கள் குடிநீருக்காக வெகுதூரம் செல்லவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு குடிநீர் வாரியம் மின்சார மோட்டார்களை 20 மணி நேரம் இயக்கி குடிநீரை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் சேகரித்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் எங்கள் ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டனர்.

ஆனால், திமுக ஆட்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் திட்டங்களுக்கான மின் மோட்டார்கள் இயங்குவது 20 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். குடிநீர் தேவை கூடுதலாக தேவைப்படும் இந்தக் கோடையில், மின் மோட்டார்களை 22 மணி நேரமாக இயக்கி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று திமுக அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios