Asianet News TamilAsianet News Tamil

மருத்துவமனைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் - நிர்வாகங்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்…

To keep the hospitals clean - ask the administrator for administrations ...
To keep the hospitals clean - ask the administrator for administrations ...
Author
First Published Oct 16, 2017, 6:32 AM IST


கரூர்

உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதியுள்ள மருத்துவமனை நிர்வாகங்கள் தங்களது மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதியுடன் கூடிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிர்வாகிகளுக்கு டெங்கு தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது:

“முதல்வரின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் தீவிர டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் நகராட்சியில் 200 பணியாளர்களும், பேரூராட்சி பகுதிகளில் 120 பணியாளர்களும், ஊராட்சிப் பகுதிகளில் ஒரு ஊராட்சிக்கு ஒரு பணியாளர் என்ற அடிப்படையில் கொசுப்புழு ஒழிக்கும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களை கண்காணிக்க ஐந்து வார்டுகளுக்கு ஒரு மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இப்பணி மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள விடுதியுடன் கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் விடுதிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாகவும், தண்ணீர் தேங்காத வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதியுள்ள மருத்துவமனை நிர்வாகங்கள் தங்களது மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மக்களுக்கு வழங்கும் குடிநீர் குளோரினேசம் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் மக்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருகவேண்டும். குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகிறது. தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் தண்ணீர், மழைநீர் போன்றவை தேங்காத வகையில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் விஜயகுமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி மற்றும் நகராட்சி ஆணையர்கள் ப.அசோக்குமார், கமால்பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios