Asianet News TamilAsianet News Tamil

Ramadoss: 12,000 நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்ததை மூடி மறைக்க முயற்சிப்பதா? ராமதாஸ் ஆவேசம்

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Pmk founder ramadoss Condemnation for bags of paddy kept at Villupuram were damaged by rain vel
Author
First Published May 9, 2024, 12:20 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  கொள்முதல் செய்வதற்காகவும்,  கொள்முதல் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்த  12,000-க்கும் கூடுதலான நெல்  மூட்டைகள் புதன் கிழமை பெய்த கோடை மழையில் நனைந்து சேதமடைந்தன.  நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கடுமையான  விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதை மூடி மறைக்க செஞ்சி  ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  விற்பனைக்காக  உழவர்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்ததால்  அவை பாதிக்கப்படவில்லை என்றும்,  உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த  4500 நெல் மூட்டைகள் மட்டும் தான் சிறிதளவு பாதிக்கப்பட்டதாவும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.  இது அப்பட்டமான பொய் ஆகும்.

அண்ணன் என நம்பி வந்த சிறுமி; மனநலம் பாதித்தவர் என்றும் பாராமல் காமுகன்கள் செய்த கொடூர செயல்

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளில்  பெரும்பாலானவை உழவர்களுக்கு சொந்தமானவை.  அந்த நெல் மூட்டைகள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தால்  அவை பாதுகாக்கப்பட்டிருக்கும். இன்னும் கேட்டால் உழவர்கள் விற்பனைக்காக  கொண்டு வரும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக அடுக்கி வைப்பதற்காகத் தான் கிடங்குகள்  கட்டப்பட்டிருக்கின்றன.  ஆனால்,   வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்ட  மூட்டைகள்  மட்டுமே சட்டவிரோதமாக  கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. உழவர்களின் நெல் மூட்டைகள்  மழையில் நனைந்ததற்கு இதுவே காரணம். இந்த மோசடியை மூடி மறைக்கவே  ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் பொய்களைக் கட்டவிழ்த்து  விடுகிறது.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  உழவர்களின் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கான கிடங்குகள் , அங்கு பணியாற்றும் அதிகாரிகளின் உதவியுடன்  வணிகர்களால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து  விசாரணை நடத்தப்பட வேண்டும்.  தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

விளையாட்டில் மோதல்; ஸ்டம்பால் தாக்கிய சிறுவன், சுருண்டு விழுந்த வாலிபர் -திருவாரூரில் பரபரப்பு

செஞ்சியில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைவது காலம் காலமாக நிகழ்ந்து வருவதால், எதிர்காலத்தில் அத்தகைய பாதிப்புகளைத் தடுக்க  அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தது 10000 மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படுவதையும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள்  அடுத்த நாளே அரவை நிலையங்களுக்கோ, மண்டல அளவிலான கிடங்குகளுக்கோ கொண்டு செல்லப்படுவதையும்  அரசு உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios