Asianet News TamilAsianet News Tamil

Ponmudi: பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியையும், உரிமையையும் பெற்று தந்தது திராவிடம் தான் - பொன்முடி

பெண்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த கல்வியையும், உரிமையையும் பெற்றுத் தந்தது திராவிடம் தான் என்று கூறி விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

dravidam has break the barriers for every woman said minister ponmudi in villupuram vel
Author
First Published Apr 13, 2024, 2:57 PM IST

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி  கிராம பகுதிகளில்  மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். காணை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தனூர், பொன்னாங்குப்பம், ஆசூர், ஆசூர் காலனி, மேலக்கொந்தை, வி.சாலை உள்ளிட்ட கிராம பகுதிகளில் அமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பொன்னாங்குப்பம் பகுதியில் பேசிய அமைச்சர் பொன்முடி,  இந்தியாவில் எந்த அரசும் செய்யாத பல முன்னோடி திட்டங்களை திராவிட அரசு செய்துள்ளது. விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்றவை மகளிரின் பொருளாதார சுமையை போக்கி தன்னம்பிக்கையோடும், தன்னிறைவோடும் நீங்கள் யாரையும் சாராமல் வாழ்வதற்கான திட்டம். அது மட்டுமின்றி காலை சிற்றுண்டி திட்டம் தாய்மார்களின் சுமையை போக்கி பிள்ளைகளின் பசியை நீக்கியுள்ளது. எனவே  திமுக அரசு என்றாலே மகளிருக்கான அரசுதான் என்றார்.

தொண்டர்களின் ஓட்டம் என்னை உருக்குகிறது; ஆனால் ஓய்வெடுக்க சொல்ல முடியவில்லை - பாமகவினருக்கு ராமதாஸ் கடிதம்

பின்னர் அங்கிருந்த சிறுமியை அழைத்து பள்ளியில் காலை சிற்றுண்டி கிடைக்கிறதா, எப்படி இருக்கிறது என விசாரித்தார். தொடர்ந்து நாங்கள் படித்த காலங்களில் இது போன்ற திட்டங்கள் எல்லாம் கிடையாது‌.  அந்த காலகட்டத்தில் என்னுடன் படித்த 16 பேரில் ஒருவர் மட்டுமே பெண். பெண்களுக்கு கல்வி என்பது காலங்காலமாக மறுக்கப்பட்டது. அதனை உடைத்தெறிந்து கல்வி எனும் கரையாத செல்வத்தை பெண்கள் பெற வேண்டும் என போராடியவர் பெரியார்.  பெரியாரின் பாதையில் அவர் கண்ட கனவை செயல்படுத்தியவர்கள் அண்ணா, கலைஞர். அவர்களின் வழி வந்த முதலமைச்சர் ஸ்டாலினும் பெண்கள் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

மதம், ஜாதி என்று எந்த ஒரு பிரிவும் நமக்கிடையே கிடையாது. ஜாதி என்பது இன்றைய சூழலில் இருக்கக் கூடாது. ஆண் - பெண் இரண்டும் ஒன்றுதான் எனும் புரிதல் இருந்திட வேண்டும். ஆகையால் நீங்கள் அனைவரும் பெருமையாக திராவிட பெண் என கூறுங்கள். உங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை பெற்று தந்தது திராவிடம். உங்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை பெற்று தந்ததும் திராவிடம். நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

ஓட்டு கேட்க கூட நேரில் வரமாட்டாரா? ஜோதிமணிக்கு எதிராக எம்எல்ஏ.விடம் மக்கள் வாக்குவாதம்

அனைவரும் சமம் என்பதே திராவிடம். அதுவே திராவிட ஆட்சியின் அடிப்படை. பாலின ஏற்றத்தாழ்வை கலைந்து பாலின சமத்துவத்தை கட்டமைப்பதே ஒரு சமூகத்திற்கு அவசியமாகும்.  அதை நிறைவேற்றவே நமது அரசு எண்ணற்ற பல நலத்திட்டங்களை முன்னெடுக்கிறது. நமது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்ற துணையாக உறுதுணையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆதரவு பெற்ற ரவிக்குமார் அவர்களுக்கு பானை சின்னத்தில் மறவாமல் வாக்களியுங்கள். உங்கள் பகுதியில் உள்ள மற்றவர்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்லுங்கள் எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்பி கௌதம சிகாமணி மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios