Asianet News TamilAsianet News Tamil

ஐடி, சிபிஐ வைத்து மிரட்டும் பிரதமர் மோடி.. இது நடக்காது.. மதுரையில் பாஜகவை வெளுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்..

தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? என்று அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை பிரதமர் மோடி மீது வைத்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

Chief Minister MK Stalin slams pm modi and bjp govt at Madurai DMK meeting-rag
Author
First Published Apr 9, 2024, 9:55 PM IST

இன்று மதுரையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணிற்கு வந்திருக்கிறேன்.  இந்தியா கூட்டணியின் இந்த இரண்டு வேட்பாளர்கள், சு.வெங்கடேசன் அவர்களையும், கார்த்தி சிதம்பரம் அவர்களையும் மீண்டும் இந்த முறை கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல.

இந்த ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும், இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப்பிறகு என்ன, வெற்றி உறுதி. மீண்டும் எம்.பி. ஆகிவிடுவீர்கள், வேட்பாளர்கள் உட்காருங்கள். நீங்கள் அளிக்கும் வாக்கு உங்கள் தொகுதிக்கான எம்.பி.யைத் தேர்வு செய்ய மட்டும் இல்லை. இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வர அடித்தளம் அமைக்கப் போகிறது. வரப்போகும் பிரதமர் எப்படிப்பட்டவராக இருப்பார்? நீட் தேர்விலிருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கும் பிரதமராக அவர் இருப்பார்.

சமூகநீதி மேல் உண்மையான அக்கறையுடன், இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காட்டை உயர்த்தும் பிரதமராக இருப்பார். SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்கு ஆக்கும் பிரதமராக இருப்பார். மொத்தத்தில், இந்திய ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை மதச்சார்பின்மையை சமூகநீதியை மதிக்கும் பிரதமராக இருப்பார். மிகவும் முக்கியமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும், தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக, இந்தியா கூட்டணி பிரதமர் ஆட்சி செய்வார். இன்னும் ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, நிச்சயம் இருக்க மாட்டார்.

கடந்த பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டு மக்களை மதித்து தமிழ்நாட்டிற்கு என்று எந்த சிறப்புத் திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி, இப்போது வாக்கு கேட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாரா? எந்த முகத்துடன், மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களையும் வஞ்சிக்கிறார். பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத் திட்டங்களுக்குக் கடன் வாங்கக்கூட, உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் நிலைமையை உருவாக்கியிருக்கிறார்.

கர்நாடகாவும் வறட்சி நிவாரணம் கேட்டு, உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த இரண்டு மாநில முதலமைச்சர்களும் தில்லியில் சாலையில் போராடும் அவல நிலையை ஏற்படுத்தினார் பிரதமர். மேற்கு வங்கத்திற்கும் இதே நிலைமைதான்.  மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது? குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினார். ஆட்சியைக் கலைத்தார். ஆளும் கட்சியை உடைத்து, இப்போது அந்த மாநிலத்தையும் நாசமாக்கிவிட்டார். அடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்ன நிலைமை? பழங்குடியின முதலமைச்சரான ஹேமந்த் சோரன் அவர்களைக் கைது செய்தார்.

டெல்லியிலும். பஞ்சாப்பிலும் என்ன செய்தார்? அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை விட்டுத் தொல்லை கொடுக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தேர்தல் அறிவித்ததற்குப் பிறகு கைது செய்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும், இ.டி, ஐ.டி, சி.பி.ஐ மற்றும் ஆளுநர்களை வைத்துத் தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா. 
அவரை எதிர்த்து யாராவது பேசினால் என்ன நடக்கும்? சமீபத்திய உதாரணம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக்! அவர் என்ன சொன்னார்! 2019-இல் நடந்த புல்வாமா தாக்குதல், அரசியல் ஆதாரத்திற்காக எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள், மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை. ஊழல்வாதிகள் அவர்கூடவே இல்லை.

அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கமாக ஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தார். உடனே அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு. எவ்வளவு மலிவான அரசியல்? பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி, இப்போது தொடர்ந்து பேசும் பிரதமர், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது, வாய் திறக்கவில்லையே ஏன்? குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது, பெண் சக்தி மேல் பிரதமர் மோடிக்கு அக்கறை வந்ததா? மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை, மவுனமாக ஏன் வேடிக்கை பார்த்தார்? ஒரு தடவையாவது மணிப்பூருக்குச் சென்று மக்களுக்கு பாதிக்கப்பட்ட ஆறுதல் கூறுகிறாரா?

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

அதுமட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தையைக் கோயிலில் வைத்து வன்புணர்வு செய்தார்களே? அந்தக் குற்றவாளிக்கு ஆதரவாக, இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே? இதற்குக் கண்டனம் எழுந்த உடனேயே, அவர்கள் என்ன சொன்னார்கள்? கட்சித் தலைமைதான் எங்களை அனுப்பி வைத்தது என்று கூறிய அவர்களை, மோடி தட்டிக் கேட்டாரா?
உத்தரப் பிரதேசத்தில் உன் ஞாபகம் இருக்கிறதா? வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் வன்புணர்வு செய்தார். இதைப் புகாராக அந்தப் பெண் சொல்லக் கூடாது என்று, குல்தீப்பின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து நாள்கணக்கில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்கள்.

காப்பாற்றச் சென்ற தந்தையை போலி வழக்கு போட்டு சிறையிலேயே வைத்து அநியாயமாகக் கொன்றார்களே? நியாயம் கிடைக்காத விரக்தியில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி வீட்டுக்கு முன்பு, அந்த பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்கள்! அதற்குப் பிறகும் கூட அந்தப் பெண்ணை வண்டி ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர்கள் அத்தை இறந்தார்கள்! இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது யார்? பிரதமராக இருக்கக் கூடிய மோடிதான்.  ஹாத்ரஸ் மறந்து போனதா? அப்பாவி தலித் பெண் ஒருவர், வன்புணர்வு செய்யப்பட்டு இறந்தாரே! அவரின் உடலை பெற்றோர் சம்மதம் இல்லாமல், பெட்ரோல் ஊற்றிப் போலீசே எரித்தார்களே?

பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட சகோதரர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுமதி மறுத்தார்களே? இப்படிப்பட்ட காட்டாட்சிதான், பா.ஜ.க. ஆட்சி. நம்மைப் பொறுத்தவரை, திராவிட மாடல் அரசு இந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்த பெருமிதத்துடன் உரிமையுடன் உங்களிடம் வாக்கு கேட்கிறேன்.
மதுரையில் அறிவின் அடையாளமாக பிரமாண்டமாக எழும்பி இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் தனது வாதங்களால் தடை ஏற்படுத்தப்படும், அதை உடைத்து வெற்றி பெற்று, ஜல்லிக்கட்டு நடத்துகிறோம். உலகமே நமது வீர விளையாட்டைத் திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.

தமிழ் நாகரிகத் தொட்டிலாக இருக்கும் கீழடி ஆய்வு நடக்க கூடாது என்று எப்படியெல்லாம் தடை ஏற்படுத்தியது பா.ஜ.க! எத்தனை சதிச் செயல்களில் ஈடுபட்டார்கள்! நமது சு.வெங்கடேசனைக் கேட்டால் ஒரு மணி நேரம் விளக்குவார். அந்தத் தடையை எல்லாம் உடைத்து எறிந்து, தமிழ் நாகரிகத்தின் அடையாளமாக அமைக்கப்பட்டிருக்கிறது, கீழடி அருங்காட்சியகம்!
இப்படி தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளை முழுமையாக எடுத்துச் சொன்னால், எல்லாக் கூட்டங்களும், “சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களாக“ மாறிவிடும். அதனால், நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளால் பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் சொல்லட்டுமா?

எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், தாய்வீட்டுச் சீர் என்று 1 கோடியே 15 இலட்சம் சகோதரிகள் உரிமையுடனும், பாசத்துடனும் சொல்லும், கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும் - கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். 16 இலட்சம் குழந்தைகள் காலையில் பசியுடன் பள்ளிக்கு வராமல்; சூடாகவும், சுவையாகவும், சத்தாகவும் சாப்பிட்டுப் பாடங்களை நன்றாக கவனிக்க, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்திய மக்களிடம் பா.ஜ.க. அரசு அதிக விலைக்கு விற்று இலாபம் பார்த்த பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். 
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

தொழிலாளர் விரோதச் சட்டங்களும் - ஜி.எஸ்.டி. சட்டமும் சீர்திருத்தம் செய்யப்படும். விவசாய கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கிய கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில், மக்களைச் சுரண்டும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு என்று பத்தாண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்துவிட்டாரா? உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்கிவிட்டாரா?

விலைவாசியைக் குறைத்துவிட்டாரா? இந்திய நதிகளை இணைத்துவிட்டாரா? எல்லோருக்கும் வீடு கொடுத்துவிட்டாரா? குழாய் மூலம் எரிவாயு இணைப்பு கிடைத்துவிட்டதா? பெண்களுக்கான நடமாடும் வங்கி என்று சொன்னாரே, அது எங்கேயாவது நடமாடிப் பார்த்தீர்களா? பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்திவிட்டாரா? வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று சொன்னாரே, மணிப்பூருக்கு நேர்ந்தது என்ன? என்று பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

IRCTC Tour: கம்மி பட்ஜெட்டில் சுவிட்சர்லாந்து முதல் பிரான்ஸ் வரை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios