பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொடர்ந்து 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொடர்ந்து 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமானது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4750 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இப்பகுதியில் விமான நிலையம் அமையும் பட்சத்தில் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி விமான நிலையம் அமையவுள்ள பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏக்னாபுரம் கிராம மக்களின் போராட்டம் 185வது நாளை எட்டியுள்ள நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஏக்னாபுரம் கிராமத்தில் இன்று கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பசுமை விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே இதே போன்று கிராம சபைக் கூட்டத்தில் 3 முறை விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம் அமைக்கும் பணியை இதன் பின்னரும் அரசு தொடரும் பட்சத்தில், எங்களது போராட்ட வடிவமும் மாறுபடும் என்று கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.